வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால்: மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்களில், மெய்டி இன பெண்கள் கூட்டமைப்பு, ‘பந்த்’ நடத்தி வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மெய்டி சமூகத்தினர் மற்றும் பழங்குடியினரான கூகி சமூகத்தினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே 3ல் ஏற்பட்ட மோதல் வன்முறையாக
வெடித்தது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த, 16ல் ராணுவ உடையணிந்த இளைஞர்கள் ஐந்து பேர் ஆயுதங்கள் ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, கடந்த 16ல் ஐந்து இளைஞர்களையும் விடுவிக்கக் கோரி போரம்பட் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை, பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களையும் விடுவிக்கக் கோரி, மெய்டி பெண்கள் கூட்டமைப்பான, ‘மெய்ராபாய்பி’ மற்றும் ஐந்து உள்ளூர் அமைப்புகள் நேற்று முன்தினம் துவங்கி, 48 மணி நேர ‘பந்த்’ எனப்படும் கடைஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு
விடுத்துள்ளன.
இதையொட்டி சந்தைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில வாகனங்களே சாலைகளில் இயங்கின. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசு நேற்றும், இன்றும் நடத்த திட்டமிட்டிருந்த துணைப்பொதுத்தேர்வுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன.இந்த தேர்வுகள் பின்னர் நடத்தப்படும். முழு அடைப்பு காரணமாக இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக அனைத்து லங்கதபால் கேந்திரா ஒருங்கிணைப்பு குழு தலைவர் யும்னம் ஹிட்லர் கூறியதாவது:கூகி அமைப்பினர் நடத்தும் தாக்குதலை பாதுகாப்பு படையினர் முறையாக தடுப்பதில்லை. இதனால் கிராம இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாத்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement