கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி சீட்டு நடத்தி வருக்கிறது. ஒவ்வொரு பண்டிகைக் காலங்களிலும் லாட்டரி விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளுக்கு லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரூ.1 கோடி, ரூ.10 கோடி, ரூ.25 கோடி என பம்பர் பரிசுகள் அறிவிக்கப்படுவதால், லாட்டரி வாங்குபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/FB_IMG_1695129218076.jpg)
கடந்த ஓணம் பண்டிகைக்கு 25 கோடி ரூபாய் பரிசு பெற்ற திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவர் கடன் கேட்டு வந்தவர்களுக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த சம்பவங்களும் உண்டு. பின்னர் அவரும் லாட்டரிச்சீட்டு விற்பனை நிலையம் தொடங்கி நடத்தி வருகிறார்.
தற்போது ஓணம் பண்டிகை பம்பர் பரிசுக்கான லாட்டரிச் சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. ஓணம் பம்பர் பரிசாக 25 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகைக்கான லாட்டரிச் சீட்டு குலுக்கல் நாளை மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் கார்கி பவனில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நேற்று மாலை நிலவரப்படி ஓணம் லாட்டரி சீட்டு 71 லட்சத்து 50 ஆயிரம் வரை விற்பனை ஆகியுள்ளது. திருவோணம் பம்பர் லாட்டரிச் சீட்டுக்கு ஒரு டிக்கெட் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/FB_IMG_1695129281384.jpg)
கடந்த ஆண்டு 66 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆயின. இந்த ஆண்டு அதைவிட அதிக அளவு டிக்கெட் விற்பனை ஆகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
லாட்டரித் துறை இன்று மாலை 5 மணியுடன் ஏஜெண்டுளுக்கு லாட்டரிச் சீட்டுக்கள் விநியோகிப்பதை நிறுத்திவிட்டது. நாளை லாட்டரி குலுக்கல் நடப்பதற்கு சற்று முன்பு வரை லாட்டரி சீட்டுக்களை வாங்கிக்கொள்ளலாம் என கேரள லாட்டரித் துறை அறிவித்துள்ளது.
ஏற்கெனவே வட மாநிலத் தொழிலாளர்கள் பலருக்கும் ஒரு கோடி ரூபாய், 75 லட்சம் ரூபாய் என பரிசுகள் கிடைத்து வருகின்றன. இதைத் தொடர்ந்து கேரளாவில் பணிபுரிந்துவரும் மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட வடமாநிலத் தொழிலாளர்களும் அதிகளவில் லாட்டரிச் சீட்டுக்களை வாங்கி வருகின்றனர்.
மேலும், கேரளாவை தொட்டு அடுத்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் லாட்டரி சீட்டு அதிகமாக வாங்கியதால் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Anoop.webp.jpeg)
கேரளா லாட்டரித் துறை தமிழ், ஹிந்தி, வங்காளம், அசாம் உள்ளிட்ட மொழிகளில் லாட்டரி குறித்த விளம்பரம் செய்யப்பட்டதும் விற்பனை அதிகரிக்க காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஓணம் பம்பர் லாட்டரி பரிசுச் சீட்டுக்காக மொத்தமாக 80 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. கடந்த ஜூலை மாதம் விற்பனை தொடங்கியது. நாளை மதியத்துக்குள் சுமார் 75 லட்சம் லாட்டரி சீட்டுக்கள் வரை விற்பனை ஆவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
லாட்டரியில் 25 கோடி ரூபாய் பம்பர் பரிசு கிடைக்கும் அதிஷ்டசாலிக்கு 10% ஏஜெண்ட் கமிஷன், 30% வரி போக 15.75 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த முறை 25 கோடி ரூபாய் பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பதைத் தெரிந்துகொள்ள கேரளாவே பரபரப்பாக காத்திருக்கிறது!