சூதாட்ட மொபைல் ஆப் ஒன்று சத்தீஷ்கர் உட்பட வட மாநிலங்களில் மிகவும் பிரபலமாகும். அந்த மொபைல் ஆப் உரிமையாளர் சவுரப் என்பவருக்கு சத்தீஷ்கர் சொந்த ஊராகும். அவர் தனது நண்பருடன் சேர்ந்து துபாயிலிருந்து கொண்டு மொபைல் சூதாட்ட ஆப்பை இயக்கி வருகிறார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது திருமணத்தை ரூ.200 கோடி செலவு செய்து ஆடம்பரமாக நடத்திய பிறகுதான், அவர் குறித்து வெளியுலகுக்கு தெரியவந்தது. சவுரப்பும், அவரின் கூட்டாளி ரவி என்பவரும் சேர்ந்து 500 கோடி ரூபாய் அளவுக்குப் பண மோசடி செய்திருப்பதாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப் பிரிவு நடத்திய விசாரணையில், சவுரப்புக்கு மும்பை தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.
இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், “சவுரப் இந்தியாவில் நடத்துவதுபோல் பாகிஸ்தானிலும் தனது மொபைல் ஆப்பை நடத்துகிறார். இதற்காக 2021-ம் ஆண்டு பாகிஸ்தானில் 300 முதல் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. சவுரப் இதற்காக தாவூத் இப்ராஹிமுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார். பாகிஸ்தானில் சவுரப் தனது தொழிலுக்குத் தேவையான உதவியும், பாதுகாப்பும் கொடுக்க தாவூத் இப்ராஹிம், ஐ.எஸ்.ஐ அமைப்பினர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கணிசமான தொகையைக் கொடுத்து வருகிறார். பாகிஸ்தானில் ஹவாலா தொழிலையும் சவுரப் செய்து வருகிறார். அதோடு அந்த சூதாட்ட மொபைல் ஆப்பை எந்த லாபப் பகிர்வும் இல்லாமல் நடத்திக்கொள்ள, தாவூத் இப்ராஹிம் ஆட்கள் சிலருக்கு சவுரப் அனுமதியும் கொடுத்திருக்கிறார்.
பாகிஸ்தானில் மற்றவர்களுடன் 30-70 என்ற லாபப் பகிர்வு முறையில் தனது மொபைல் ஆப் தொழிலை சவுரப் நடத்தி வருகிறார். துபாயில் நடந்த திருமணத்தில் பாகிஸ்தானில் சவுரப்பின் மொபைல் ஆப்பை இயக்கும் தொழில் பார்ட்னர்கள், ஏஜன்சி உரிமையாளர்கள், தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளும் கலந்துகொண்டிருப்பது இந்திய உளவுத்துறைக்கு சமீபத்தில் தெரியவந்திருக்கிறது. அந்த வீடியோவை உளவுத்துறையினர் இப்போது ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கலந்துகொண்ட தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள், மொபைல் ஆப் ஏஜென்ட்டுகள், சவுரப்பின் தொழில் பார்ட்னர்களை அடையாளம் காணும் பணியில் உளவுத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாகிஸ்தானில் அனைத்து வகையான சூதாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. லாட்டரிக்குக்கூட தடை இருக்கிறது. சூதாட்டத்தில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்க சட்டத்தில் இடமளிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் சவுரப்பின் சூதாட்ட மொபைல் ஆப் பாகிஸ்தானில் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதில் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், சீட்டு விளையாட்டு போன்றவற்றை ஆன்லைனில் பணம் கட்டி விளையாட முடிகிறது. சவுரப் துபாயிலிருந்து கொண்டு இந்தியா, பாகிஸ்தானில் மொபைல் ஆப்பை இயக்கி வருகிறார்.
இந்த தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் பாகிஸ்தானில் எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பது குறித்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் லாகூர், கராச்சி, ஹைதராபாத் மற்றும் இதர மாகாணங்களில் இந்தச் சூதாட்ட ஆப் முழுவேகத்தில் செயல்பாட்டில் இருக்கிறது. இதில் கிடைக்கும் லாபத்தில் 70 சதவிகித லாபத்தை சவுரப் எடுத்துக்கொள்கிறார். அதோடு பாகிஸ்தானின் செயல்பாட்டை சவுரப் துபாயிலிருந்து தானே கண்காணித்துக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கின்றனர்.