சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தனது 73-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, நாடு முழுவதும் பாஜகவினர் பல்வேறு நல திட்டங்களை வழங்கினர்.
மேலும், தமிழகம், தெலங்கானாஆளுநர்கள், முதல்வர் மற்றும்அரசியல் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பிரதமருக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பதாவது:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள். தேசத்தை வழிநடத்த அவருக்கு நல்ல ஆரோக்கியமும், ஊக்கம் அளிக்கும் தலைமைத்துவத் துக்காகவும் பிரார்த்தனைகள்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: விண்ணுலகில் சந்திரயான், ஆதித்யா போன்ற விண்கலங்களால் வெற்றிகண்டு, உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திய தலைவர், ஏழை மக்களின் நலன் காக்கும் தலைவர், அடுத்த தலைமுறைக்கும் பாடுபடும் தலைவர் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். தாங்கள்நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் இருக்க வாழ்த்து கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: இரக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் ஆகிய தொலைநோக்குப் பார்வையே தலைமைப் பண்புகள் கொண்ட பிரதமராக உருவெடுத்துள்ளது. அவரது பிறந்த நாளில், அவர் மற்றொரு வெற்றிகரமான பதவிக் காலத்தையும், நூறாண்டு சேவை செய்யவும் வாழ்த்துகிறேன்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: இந்தியா முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. சந்திரயான்-3 வெற்றி பிரதமரின் தொலைநோக்கு தலைமைக்கு சான்றாகத் திகழ்கிறது. தேசத்தின் முன்னேற்றத்துக்காக பிரதமரின் அர்ப்பணிப்பு அசைக்கமுடியாதது. வரும் ஆண்டுகள் பிரதமருக்கு நல்ல ஆரோக்கியத்தை யும், எல்லையற்ற ஆற்றலையும், பல வெற்றிகளையும் தரட்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: பிரதமர் நரேந்திர மோடியின் 73-வதுபிறந்த நாளில் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து நலன்களுடன், நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: பிரதமர் நரேந்திர மோடி இன்னும்பல ஆண்டுகளுக்கு நல்ல உடல்நலம், மகிழ்ச்சி, வலிமை ஆகியவற்றுடன் வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: உலக நாடுகளில்எல்லாம் தமிழ் மொழியின் தொன்மையையும், பெருமையையும் எடுத்துக் கூறியவர் மோடி. தன் கையில்எடுக்கும் ஒவ்வொரு செயலிலும், துல்லியமான திட்டமிடல், தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல்திட்டம், திறமை வாய்ந்த செயலாற்றும் குழுவினர் என்று இவர் எடுக்கும்ஒவ்வொரு நடவடிக்கையும் நம்நாட்டின் நன்மதிப்பையும், புகழையும் பெருமையையும் உயர்த்திக் கொண்டே இருக்கிறது.
தமாகா தலைவர் ஜி.கேவாசன்: தனது 9 ஆண்டுகால ஆட்சியில், இந்திய தேசத்தை வளம் நிறைந்த,வலிமைமிக்க நாடாக, உலக அரங்கில் நிலை நிறுத்திய பிரதமரின் பணி தொடர வேண்டும். இறைவனும் அருள்புரிய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.