நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடி வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்திருக்கிறது.
இதைக் கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிக்கு BMW X7, நெல்சனுக்கும் அனிருத்திற்கும் Porsche என விலையுயர்ந்த கார்களைப் பரிசாக வழங்கினார். இது சமூக வலைதளங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் பெரும் பேசுபொருளாகியிருந்தது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக வெற்றி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ரஜினி காந்த், தமன்னா, சுனில், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய நடிகர் ரஜினி, “படத்தின் வெற்றிக்குப் பிறகு படத்தில் வேலைபார்த்த டெக்னீசியன்ஸ் எல்லோருக்கும் கறிவிருந்து போட்டு, எனக்கு, அனிருத்துக்கு, நெல்சனுக்கு விலையுர்ந்த கார்களைப் கலாநிதிமாறன் அவர்கள் பரிசளித்தார். அந்தக் காரில்தான் இங்கு வந்தேன். அந்தக் காரில் உட்கார்ந்து வரும்போதுதான் உண்மையில் நான் பணக்காரனாக உணர்ந்தேன். அதுமட்டுமின்றி, இப்படத்தில் பணியாற்றியவர்களுக்கும் தங்க நாணயம் பரிசளித்துள்ளார் கலாநிதிமாறன். ஒருபடத்தின் வெற்றியை எப்படி கொண்டாட வேண்டும் என்பதற்கு இந்தியாவில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்.
பின்னணி இசைக்கு முன் இப்படத்தைப் பார்த்தபோது கொஞ்சம் ஆவரேஜாகத்தான் இருந்தது. ஆனால், அனிருத் பின்னணி இசையமைத்த பிறகு படம் எங்கேயோ போய்விட்டது. என் மகன் அனிருத். அவரைப் பொறுத்தவரை எனக்கு ஹிட் கொடுக்க வேண்டும், அவரது நண்பர் நெல்சனுக்கு ஹிட் கொடுக்க வேண்டும். கேமராமேன் கார்த்திக்கின் ஒவ்வொரு பிரேமும் சிறப்பாக இருந்தது. எடிட்டரும் மிகச் சிறப்பாகப் பண்ணியிருந்தார். இப்படத்தில் பணியாற்றிய எல்லா டெக்னீசியன்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.
‘ஜெயிலர்’ படத்தைப் பார்த்த கலாநிதி மாறனிடம், ‘படம் எப்படி இருக்கு, ‘பேட்ட’ படம் மாதிரி வருமான்னு கேட்டேன். அதுக்கு அவர், ‘பேட்டயா…. 2023 ‘பாட்ஷா’ என்று சொன்னார். இசை வெளியீட்டு விழா மேடையிலும், ‘படம் மெகா ஹிட், ரெக்கார்ட் மேக்கர்’ என்று மனம் திறந்து வெளிப்படையாகச் சொன்னார். சத்தியமாக, இப்படத்தின் வெற்றியைப் பார்த்து ஐந்து நாட்கள் மட்டுமே சந்தோஷமாக இருந்தேன். அதன்பிறகு, அடுத்தப்படத்தில் இதைவிட எப்படி ஹிட் கொடுக்கப்போகிறோம் என்று டென்க்ஷன் வந்து விட்டது.
இதேபோலத்தான் ‘பாட்ஷா’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப்பிறகு இப்படி இருந்தேன். அப்போது ‘பாட்ஷா’ பாணியிலிருந்து விலகி ‘முத்து’ படம் பண்ணினேன். இப்போ ஜெயிலருக்குப் பிறகு ‘லைகா’ வுடன் வேறு பாணியில் படம் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு மட்டுமல்ல நெல்சனுக்கும் இந்த பயம் இருக்கும். ஆனால், அதையெல்லாம் கடந்து அதைவிட மிகப்பெரிய உழைப்பைப் போட்டு வெற்றிப்படத்தை நாம் கொடுக்க வேண்டும்.
இப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரம் ‘வர்மன்’ மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று முன்பேச் சொல்லிருந்தேன். அதைச் சிறப்பாகப் பண்ணியிருந்தார் நடிகர் விநாயகன். ‘இராவணனால் தான் இராமனுக்கு மரியாதை’ என்பதைப்போல், வர்மனால்தான் என்னுடைய ஜெயிலர் கதாப்பாத்திரம் சிறப்பானது. இதுதவிர இப்படத்தில் நடித்த, பணியாற்றிய அனைவரும் சிறப்பாகப் பணியாற்றிய இருந்தனர். அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.