புதுடெல்லி: அரசியல் சாசன முன்னுரையிலிருந்து ‘மதச்சார்பின்மை’, ‘சமதர்மம்’ சொற்கள் நீக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன பிரதிகளில் முன்னுரையில் ‘மதச்சார்பின்மை’, ‘சமதர்மம்’ சொற்கள் நீக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இந்த இரண்டு வார்த்தைகளும் நீக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே கவலை அளிப்பதாக இருக்கிறது. அரசாங்கம் இந்த மாற்றத்தை தந்திரமாக மேற்கொண்டுள்ளது. அவர்களின் நோக்கம் பிரச்சினைக்குரியது.இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப நினைத்தேன் ஆனால் எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை என்று ஊடகப் பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று எம்.பி.க்கள் அனைவருக்கும் புதிய நாடாளுமன்ற வளாக திறப்பை ஒட்டி ஒரு பரிசுப்பை வழங்கப்பட்டது. அதில் இந்திய அரசியல் சாசனத்தின் பிரதி, நாடாளுமன்றம் தொடர்பான புத்தகங்கள், நினைவு நாணயம் ஆகியன வழங்கப்பட்டன.