மைசூரு, : ”தேர்தலின் போது வருணா தொகுதி வாக்காளர்களுக்கு, முதல்வர் சித்தராமையா குக்கர், அயர்ன் பாக்ஸ்களை பரிசாக கொடுத்தார்,” என்று, அவரது மகன் யதீந்திரா உண்மையை உளறி கொட்டியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். மைசூரு வருணா தொகுதியில் இருந்து, கர்நாடகா சட்டசபைக்கு எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில், மைசூரின் நஞ்சன்கூடில் மடிவாளா சமூக கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இந்த கூட்டத்தில் முதல்வர் சித்தராமையாவின் மகனும், வருணா தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான யதீந்திரா பேசுகையில், ” தேர்தலின் போது வருணா தொகுதி மடிவாளா சமூக மக்களுக்கு குக்கர், அயர்ன் பாக்ஸ்களை பரிசாக கொடுக்க வேண்டும் என்று, மடிவாளா சமூகத்தின் மாநில தலைவர் நஞ்சப்பா விரும்பினார்.
”அவர் விருப்பத்தின்படி, மடிவாளா சமூக வாக்காளர்களுக்கு, குக்கர், அயர்ன் பாக்ஸ்களை கொடுத்தோம். சில காரணங்களால் பரிசு பொருட்கள் கொடுப்பது, இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. அப்பாவிடம் தேதி குறித்து, மூன்றாவது முறை குக்கர், அயர்ன் பாக்ஸ்களை கொடுத்தோம். அதற்கு பலன் கிடைத்தது. எனது அப்பாவுக்கு ஆதரவு வழங்கிய, மடிவாளா சமூகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்,” என்று பேசினார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ”யதீந்திரா கூறியதை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.
”அவர் கூறியதில் உண்மை இருந்தால், தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்து கொண்டு விசாரிக்க வேண்டும். சித்தராமையாவுக்கு எதிராக ஏற்கனவே, தேர்தல் தகராறு மனு நீதிமன்றத்தில் உள்ளது,” என்றார்.
மகன் உண்மையை உளறியதால், முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement