கனடா தனது நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டும்: வெளியுறவுத்துறை

புதுடெல்லி,

கனடாவில் காலீஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும் இந்த விவகாரத்தில் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி பவன்குமார்ராய் என்பவரை கனடா அரசு நாட்டைவிட்டு வெளியேற்றியது. இது தொடர்பாக கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டும் இன்றி பதிலடியாக கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் கனடா-இந்தியா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனடா தனது நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில்;

இந்தியாவுக்கு எதிராக குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கனடாவில் இருந்து குற்றச்செயலில் ஈடுபடுவோர் பற்றி கனடா அரசுக்கு ஆதாரம் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஹர்தீப் சிங் நிஜார் வழக்கில் எந்த தகவல்களையும் கனடா இந்தியாவுக்கு வழங்கவில்லை.

கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக விசா வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

குற்றவாளிகளின் புகலிடமாக கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் கனடா அரசு செயல்பட வேண்டும். கனடாவிலுள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்நாட்டின் பொறுப்பாகும்.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா மீது குற்றச்சாட்டுகளை கனடா முன்வைக்கிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.