`தமிழ்நாடு-கர்நாடகா’ இந்த இரு மாநிலங்களுக்கிடையே ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் முக்கிய வாழ்வாதாரப் பிரச்னை எது எனக் கேட்டால்…. அனைவரும் உடனே வாய்திறந்து உச்சரிப்பது `காவேரி நீர் பங்கீடு’ பிரச்னையைத்தான். கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜ.க என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதில் `சிக்கனம்’ காட்டிக்கொண்டு, `கர்நாடகாவின் மேக்கேதாட்டூவில் அணை கட்டியே தீர வேண்டும்’ என தீவிர முனைப்புடன் செயல்படத் தொடங்கிவிடுகின்றன.

கர்நாடகத்தில் கடந்த பா.ஜ.க ஆட்சியிலும் இதே நிலைதான்… தற்போதைய காங்கிரஸ் ஆட்சியிலும் இதேநிலைதான். தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா தர மறுப்பதாக, தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கும் தொடர்ந்தது. அதில், “கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பிலிகுண்டுலு பகுதியிலிருந்து திறந்துவிடப்பட வேண்டிய நீரில், இன்னும் 37.971 டி.எம்.சி நீர் பாக்கியிருக்கிறது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் பயிா்களைக் காப்பாற்ற வினாடிக்கு 24,000 கன அடி நீரும் திறந்துவிடப்பட வேண்டியது அவசியமாகிறது.
எனவே, `பிலிகுண்டுலு நீா் அளவைப் பகுதியில் ஆகஸ்ட் 11 முதல் அடுத்த 15 நாள்களுக்கு வினாடிக்கு 15,000 கன அடி நீா் திறந்துவிட வேண்டும்’ என கா்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மைக் குழு உத்தரவிட்டது. ஆனால், கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கா்நாடக அரசு வினாடிக்கு 15,000-ஆக இருந்த நீர் அளவை, வினாடிக்கு 10,000 கன அடியாகக் கேட்டு தன்னிச்சையாகக் குறைத்து.

கா்நாடகத்தின் நான்கு முக்கிய அணைகளிலும் ஆகஸ்ட் 8-ம் தேதி நிலவரப்படி அவற்றின் மொத்த இருப்புக்கொள்ளளவான 114.671 டி.எம்.சி-யில், 93.535 டி.எம்.சி அதாவது சுமார் 82 சதவிகிதம் நீா் இருப்பு உள்ளது. ஆகவே, குறுவைப் பயிா்களைக் காக்கும் வகையில் ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்கி இந்த மாதத்தின் எஞ்சியுள்ள நாள்களில், பிலிகுண்டுலுவிலிருந்து 24,000 கன அடி நீரைத் திறந்துவிட கா்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவின்படி, இந்த ஆண்டு செப்டம்பா் மாதத்துக்கான 36.76 டி.எம்.சி நீரைத் திறந்துவிடவும் கா்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோன்று, தற்போதைய ஆண்டின் மீதமுள்ள காலத்தில் நிா்ணயிக்கப்பட்ட மாதாந்திர நீரை திறந்துவிடுவதை முழுமையாக கா்நாடக அரசு செயல்படுத்துவதையும் உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்” என முறையிட்டது.
அதே நேரம் காவிரி நதிநீா் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை மாற்றியமைக்கக் கோரி கா்நாடக அரசு சாா்பிலும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அது தொடர்பான வழக்கு இன்று விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், “இரு மாநிலங்களில் எந்த மாநிலத்துக்கும் ஆதரவான நிலைப்பாட்டை நீதிமன்றம் பரிசீலிக்காது. இதில் தலையிடுவதை விரும்பவில்லை. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவுகளை அமல்படுத்த முடியாது என கர்நாடக அரசு கூற முடியாது. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவுகளை எதிர்த்து, தொடரப்பட்ட அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்க முடியாது.
அதே நேரம், இரண்டு மாநிலங்களுக்கும் இடையேயான நீர் பங்கீடு விவகாரத்தை காவிரி மேலாண்மைக் குழு மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு மறு பரிசீலனை செய்யலாம். அதோடு, காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் இணைந்து காவிரி நீர் தொடர்பாக 15 நாள்களுக்கு ஒருமுறை கண்காணிக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. தமிழகத்துக்கு, காவிரியிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.