தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கைதை அரசியல் பழிவாங்கல் என அக்கட்சியினர் சித்தரிக்க முயற்சிப்பதாக ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் கட்சியின் நடத்தை கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் கடந்த 2018-ம் ஆண்டு, திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.371 கோடி கைமாறியதில் ஊழல் நடந்ததாக சந்திரபாபு நாயுடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அம்மாநில சட்டப்பேரவையிலும் இது எதிரொலித்தது. இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவையில் மீசையை முறுக்கி, தொடையை தட்டி இருந்தார் நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா. அதனால் அவை தலைவர் அவரை அவை நடவடிக்கைகளில் பங்கேற்க சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
“ஊழல் செய்ததற்கு உறுதியான ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அவரது கைதை அரசியல் பழிவாங்கல் என தெலுங்கு தேசம் கட்சியினர் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். குண்டர்களை போல சட்டப்பேரவையில் அவர்களது நடவடிக்கை உள்ளது. அக்கட்சி உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தை காக்க வேண்டும்.
பாலகிருஷ்ணா, பேரவையை சினிமா பட தளமாக எண்ணி மீசையை முறுக்குவது கண்டனத்துக்கு உரியது. மக்களுக்காக குரல் கொடுக்க தவறும் அவர், தனது அக்காவின் கணவருக்காக குரல் கொடுக்கிறார். பெண்களை இகழ்ந்து பேசுவது அவரது வழக்கம்” என பத்திரிக்கையாளர்களிடம் ரோஜா தெரிவித்தார். தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சியில் ரோஜா அங்கம் வகித்துள்ளார்.