புதுடில்லி, மக்கள் தொகை உயர்வை தென் மாநிலங்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தி விட்டதால், தொகுதி மறுவரையறையின் போது பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் மத்திய அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.
மக்கள் தொகை
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த பின், தொகுதி மறுவரையறை கமிஷன் அமைக்கப்பட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஜனநாயக முறைப்படி தொகுதி மறுவரையறை செய்யும் பணி துவங்கப்படும். அதோடு, மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியும் நடத்தப்படும்.
அரசியலமைப்பு சட்டம், 82வது பிரிவின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2026ல் முடிவடைந்த பின், தொகுதி மறுவரையறை பணி துவங்கும்.
இந்த இரண்டு பணிகளும் முடிந்த பின், மக்கள் தொகையின் அடிப்படையில், மாநிலங்களுக்கான எம்.பி.,க்கள் எண்ணிக்கை கூடவோ, குறையவோ செய்யும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா பார்லிமென்டில் தற்போது நிறைவேறினாலும், இந்த பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்து, 2029ல் தான் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
வட மாநிலங்களை பொறுத்தவரை மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால் தென் மாநிலங்களில் பல ஆண்டு களாக நடத்தப்பட்டு வரும் மக்கள் தொகை கட்டுப்பாட்டு விழிப்புணர்வு வாயிலாக, மக்கள் தொகை முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளது.
இது, தொகுதி மறுவரையின் போது, வட மாநிலங்களின் எம்.பி.,க்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என, தென் மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக, லோக்சபாவில் நேற்று காரசார விவாதங்கள் நடந்தன.
மிகுந்த கவனம்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாமதமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், மக்கள் தொகை உயர்வை தென் மாநிலங்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டதால், தொகுதி மறுவரையறையின் போது பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் மத்திய அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்