மதுரை: திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்குப் பின் நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் இயக்கமாக செயல்படுவோம் என அமைச்சர் உதயநிதி பேசினார்.
மதுரை தெற்கு மாவட்ட திமுகவினருக்கு பொற்கிழி வழங்குதல், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் முதலாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான முத்தப்பன்பட்டியில் நடந்தது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் எம்.மணிமாறன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் உதயநிதி, ரகுபதி, பெரியகருப்பன், பி.மூர்த்தி உள்ளிட்ட பலரும் முத்தையாவின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பணமுடிப்புடன் கூடிய பொற்கிழியை வழங்கி அமைச்சர் உதயநிதி பேசியது: மதுரை மாவட்டத்துக்கு பல முக்கிய திட்டங்களை கொண்டுவந்தது திமுக அரசு. திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் டிச.17-ல் நடக்கிறது. இதில் இளைஞரணியினர் திரளாக பங்கேற்க வேண்டும். கட்சியினருக்கு வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பணம், வேட்டி, சேலை, இனிப்புகள் என நிறைய வழங்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் பெருமையாக நினைப்பது கருப்பு, சிவப்பு துண்டைத்தான். அப்படி பார்ப்பதுதான் எங்களுக்கும் மகிழ்ச்சி. திமுகவை வளர்க்க ரத்தத்தை சிந்தி தியாகம் செய்தவர்கள் மூத்த நிர்வாகிகள். அவர்களுக்கு இளைஞரணி சார்பில் ரூ.50 லட்சம் உதவி வழங்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் பேருக்கு ரூ.40 கோடி பொற்கிழியாக வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர் எம்.மணிமாறன் அமைதியானவர். ஆக்கபூர்வமாக செய்து காட்டுவதில் வல்லவர். பதவி இல்லாத நிலையிலும் தெற்கு மாவட்டத்தில் திமுகவை வளர்த்து வருகிறார். அவர் பேசும்போது அமைச்சர் மூர்த்தி எதை செய்தாலும் அவருடன் போட்டிபோட்டு கட்சி பணியாற்றுவதாக கூறினார். மூர்த்தியுடன் யாரும், எதற்காகவும் போட்டி போட முடியாது. அது எனக்கும் பொருந்தும், மணிமாறனுக்கும் பொருந்தும். மூர்த்திக்கு எப்படி நான் உடன் பிறவாத தம்பியோ, அதைப்போல்தான் மணிமாறனும். மூர்த்தி காட்டும் பாதையில், அவரது உழைப்பில் கொஞ்சம் உழைத்தாலே போதும், தெற்கு மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றிவிட முடியும்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தோம். இதற்காக முழுமையாக உழைத்து வருகிறோம். மக்களை ஏமாற்றும் கட்சி திமுக அல்ல. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தினோம். இளைஞரணி மாநாட்டின் மூலம் மக்கள் இயக்கமாக நடத்த உள்ளோம். அனைவரும் களத்தில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும்.
முதலில் கையெழுத்து இயக்கம் துவக்கப்படும். உதயகுமாருக்கு தைரியம் இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் இயக்கத்தில் கையெழுத்து போட தைரியம் இருக்கிறதா? எய்ம்ஸ் எப்பொழுது துவங்கும் என உதயகுமாரால் கூற முடியுமா. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றியதில் மட்டுமே பாஜக சாதி்த்துள்ளது. அமித்ஷாவின் ஒரு அணிதான் அதிமுக. அக்கட்சிக்கும், பாஜகவிற்கும் உள்ளது உள்கட்சி பிரச்சினை. மக்களவை தேர்தலில் அதிமுகவின் எஜமானான பாஜகவை விரட்ட வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார். ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம், மதுரை தெற்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.