மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் மகளிருக்கு 33 சதவிகித இடங்களை ஒதுக்கும் வகையிலான `மகளிர் இட ஒதுக்கீடு மசோதா’, புதிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவையில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் தாக்கல் செய்திருந்தார். இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வில் கங்கனா ரணாவத், ஈஷா குப்தா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/F6ZSOb8W8AAPyVh.jpeg)
குறிப்பாக நடிகை கங்கனா ரணாவத், “இது ஒரு அற்புதமான யோசனை. இதற்குக் காரணம் நமது பிரதமர் மோடி மற்றும் இந்த அரசாங்கம்தான். பெண்கள் அதிகாரம் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பெண்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளார்” என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று சிறப்பு விருந்தினர்களாக நடிகைகள் தமன்னா, திவ்யா தத்தா உள்ளிட்ட நடிகைகள் புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கின்றனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகை தமன்னா, “இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். நாடாளுமன்ற நிகழ்வுகளைக் காண எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
மகளிருக்கான இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சாமானிய மக்களை அரசியலில் ஈடுபட ஊக்குவிக்கும். இந்த மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்கள் மற்ற துறைகளில் சாதிக்க முடிந்தால், அவர்களால் நாட்டையும் வழி நடத்த முடியும். இந்த மசோதா எங்களுக்கு ஒரு மைல்கல்” என்று தெரிவித்திருக்கிறார்.