மதுரை: மதுரை அருகே தனது இரு குழந்தைகளுடன் ஓடும் ரயிலில் பாய்ந்து பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே மதுரை – திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, உடல்களை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், அவர் திருப்பாலையைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (30) மற்றும் அவர்களது மகன் காளிமுத்து ராஜா (9), மகள் பவித்ரா (11) என தெரிந்தது. ஜெயலட்சுமி மதுரை ரயில் காவல் பிரிவில் கிரேடு- 1 காவலராக பணிபுரிந்துள்ளார். மருத்துவ விடுமுறையில் இருந்த நிலையில், தனது 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சமயநல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மேலும் இது குறித்து போலீஸார் கூறுகையில், ‘ஜெயலட்சுமி மதுரையில் இருந்து வேறு ஊருக்கு சமீபத்தில் பணியிட மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார். ஆனாலும் மாறுதலான இடத்திற்கு செல்லாமல் அவர் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இதற்கிடையில், தான் அவர் நேற்று 2 குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது. அவரது கணவர் சுப்புராஜ் தனியார் நிறுவனத்தில் பணிபுகிறார். தற்கொலைக்கு குடும்ப பிரச்னையா, பணியிட மாறுதல் காரணமா போன்ற கோணத்தில் விசாரிக்கிறோம்’ என்றனர்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.