மின்னல் முரளி இயக்குனருடன் ஜீத்து ஜோசப்பின் புதிய படம் அறிவிப்பு
மலையாள திரை உலகில் தற்போது முன்னணியில் இருக்கும் இயக்குனர் ஜீத்து ஜோசப். மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான டுவல்த் மேன் என தொடர் வெற்றிகளால் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனராக மாறிவிட்டார் ஜீத்து ஜோசப். தற்போது மோகன்லால் நடிப்பில் குறுகிய கால தயாரிப்பாக 'நேரு' என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. வரும் நவம்பரிலேயே இந்த படம் ரிலீஸாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக 'நுணக்குழி' என்கிற படத்தை இயக்குகிறார் ஜீத்து ஜோசப். இந்த படத்தில் கதாநாயகனாக மின்னல் முரளி படத்தின் இயக்குனர் பசில் ஜோசப் நடிக்கிறார். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பையும் வசூலையும் அள்ளிய ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் இந்த பசில் ஜோசப் தான். இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் ரசிகர்களிடம் இவர் வரவேற்பு பெற்றுள்ளதை தொடர்ந்து தனது கதைக்கு இவர்தான் சரியாக இருப்பார் என முடிவு செய்துள்ளார் ஜீத்து ஜோசப்.