`1 மாடு, 900 ரூபாய், 3 ஆண்டுகள்' காப்பீடு திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்? ஆவின் எம்.டி விளக்கம்!

மாடுகள்தான் கிராம பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. மாட்டின் மூலமாக கிடைக்கும் பாலை விற்பனை செய்து வருமானம் பார்த்து வருகின்றனர் பால் விவசாயிகள். ஒரு மாட்டின் விலை குறைந்தபட்சம் 30,000 லிருந்து அதிகபட்சம் 1,00,000 ரூபாய் வரை இருக்கிறது. நோய், எதிர்பாராத காரணங்களால் இந்த மாடுகள் இறந்துவிட்டால் விவசாயிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. அதனால், மாடுகளுக்கு காப்பீடு எடுத்துக் கொண்டால் இந்த இழப்பிலிருந்து பாதிக்கப்படாமல் இருக்கலாம்.

காங்கேயம் மாடுகள்

ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் ஆவின் மூலமாக காப்பீடு செய்து வருகிறார்கள். இந்தாண்டுக்கான காப்பீடு திட்டத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்து ஆவின் மேலாண் இயக்குநர் வினீத் ஐ.ஏ.எஸ்ஸிடம் பேசியபோது, “ஆவினுக்கு பால் கொடுப்பவர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறோம். அந்த வகையில் மாடுகளுக்கு காப்பீடு எடுக்கும் திட்டதையும் இந்தாண்டு நடைமுறைப்படுத்த இருக்கிறோம். இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. அது இறுதியானதும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும். இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக ஒரு மாட்டுக்கு 900 ரூபாய் செலுத்தினால் போதும். 3 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்யத் தேவையில்லை. இதற்கு இடைப்பட்ட காலத்தில் இழப்பு ஏற்பட்டால் காப்பீடு கோரலாம்.

யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அரசு சார்ந்த காப்பீட்டு நிறுவனங்களிடம் டெண்டர் கோரியிருக்கிறோம். டெண்டர் இறுதியானதும் அறிவிப்பு வெளியாகும். மாடுகளுக்கு காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் பால் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்” என்றார்.

வினீத் ஐ.ஏ.எஸ்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கீழுர் கால்நடை உதவி மருத்துவர் சாரங்கபாணியிடம் பேசியபோது, “மாடுகளுக்கான காப்பீட்டைப் பொறுத்தவரை ஓராண்டு, மூன்றாண்டுகள் என்ற அடிப்படையில் காப்பீடு செய்யப்படுகிறது. ஆவினுக்குப் பால் ஊற்றும் விவசாயிகள் ஆவின் மூலமாக காப்பீடு செய்கிறார்கள். தனியாருக்கு பால் ஊற்றும் விவசாயிகள் தனிப்பட்ட முறையில்தான் மாடுகளுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும். அந்த விவசாயிகள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையையோ, கால்நடை பராமரிப்புத் துறையையோ அணுகினால் வழிகாட்டுவார்கள். கால்நடை பராமரிப்புத் துறையின் மூலமாக போடப்படும் காப்பீடு, பெரும்பான்மையாக ஓராண்டு காப்பீடு திட்டமாகத்தான் இருந்து வருகிறது. இதிலும் விவசாயிகள் இணைந்து பயன்பெறலாம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.