ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் டைம் டிராவல் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ள `மார்க் ஆண்டனி’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் விஷால், எஸ்.ஜே சூர்யா, ஆதிக் ரவிசந்திரன், நிழல்கள் ரவி, விஷ்ணுபிரியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேச தொடங்கிய விஷால் முதலில் விஜய் ஆண்டனின் மகள் இறப்பு குறித்து பேசினார். “ நான் எப்பவும் விஜய் ஆண்டனியை ‘ராஜா’ என்றுதான் கூப்பிடுவேன். ஹைதராபாத்தில் இருக்கும்போது நானும், எஸ். ஜே சூர்யா சார், ஆதிக் ரவிசந்திரன் எல்லோரும் விஜய் ஆண்டனிக்கு நடந்த பேரிழப்புக் குறித்து பேசிய போது ‘நமக்கே மனசு இந்தளவிற்கு கனமாக இருக்கும்போது, அவரும் (விஜய் ஆண்டனி) அவரின் குடும்பமும் எப்படி இதை எதிர் கொள்ளப்போகிறார்கள்’ என்று மிகுந்த வருத்தப்பட்டோம்.

கடவுள் அவர்கள் குடும்பத்திற்கு பக்கபலமாக இருக்க வேண்டும். ஓர் இழப்பு என்பது சாதரண விஷயமல்ல. அதிலிருந்து மீண்டு வருவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். விஜய் ஆண்டனிக்கு மட்டும் அல்ல அவர்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் கடவுள் இதிலிருந்து மீண்டு வருவதற்கான சக்தியைக் கொடுக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் விஜய் ஆண்டனிக்கு பக்க பலமாக நான் இருப்பேன்” என்றார்.
பிறகு படம் குறித்து பேசிய அவர் , இந்தப் படம் வெற்றி அடையும் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆதிக் இனிமேல் தயவு செய்து கடிதம் மட்டும் எழுத வேண்டாம். உன் மேல் உள்ள நம்பிக்கையில் அடுத்த படங்கள் பண்ணுவதற்கும் நான் டேட் கொடுப்பேன். ஆதிக் உடன் படம் பண்ணுறேன்னு சொன்னப்போ, நிறைய பேர் `அவர் கூட ஏன் படம் பண்றீங்கன்னு’தான் கேட்டாங்க. எனக்கு கன்டன்ட் பிடிச்சிருக்கு அந்தத் தம்பி மேலயும் நம்பிக்கை இருக்கு. கரெக்டா பண்ணிடுவார்னு சொன்னேன். என்னிடம் அப்படி கேட்ட அதே ஆட்கள்தான் இப்போ கால் பண்ணி ‘படம் நன்றாக இருக்கிறது. ஆதிக் ரவிசந்திரன் நன்றாக இயக்கியிருக்கிறார்’ என்றார்கள்.

தற்போது நிறைய பேர் ஆதிக் ரவிசந்திரனுக்கே கால் பண்ணி அடுத்த டேட் எங்களுக்கே கொடுங்கள் என்று சொல்வதற்குக் கூட வாய்ப்பு இருக்கிறது. அது தான் சினிமா உலகம். எங்களை வாழ வைக்கின்ற மக்களாகிய உங்களுக்கு நன்றி. ஆதிக்கை பொறுத்தவரை அவனுக்கு இதுதான் முதல் படம் மாதிரி. இனிமேல்தான் இவனோட பயணம் ஆரம்பிக்கப் போகுது. எஸ்.ஜே சூர்யா சாருக்கு மூன்று பக்கத்துக்கு டயலாக் உங்களுக்கு இந்த சீன்ல டயலாக் இல்ல என்று தயங்கித் தயங்கி சொல்வான்.
அதெல்லாம் பிரச்னை கிடையாது. நான்தான் கைதட்டல் வாங்கணும் என்கிற அவசியம் கிடையாது. எல்லோரும் கைதட்டல் வாங்கணும் அதுதான் முக்கியம் என்றேன்” என்று தெரிவித்தார்.
மேலும் நடிகர் விஜய் குறித்து பேசிய விஷால் இப்படத்திற்கான தொடக்கமே எனக்கு பிடித்த என்னுடைய பேவரைட் நடிகரான விஜய் சாரிடம் இருந்துதான் ஆரம்பித்தது. இப்படத்திற்கான டீசரை அவர்தான் வெளியிட்டார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.