ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான `மார்க் ஆண்டனி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘இறைவி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘மாநாடு’ என எஸ்.ஜே.சூர்யா, தான் நடிக்கும் எல்லாப் படங்களிலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார். அவ்வகையில் இப்படத்திலும் அசத்தியிருந்தார். இப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றிருந்தது.
இவ்விழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, தான் ஒரு நல்ல நடிகனாவதற்காகப் பல வருடங்கள் போராடியது பற்றியும், மீண்டு வந்த தனது திரைப்பயணம் குறித்தும் உருக்கமாகப் பேசியுள்ளார். மேலும், இப்படத்தில் ‘விஷாலை விடவும் எஸ்.ஜே.சூர்யா சிறப்பாக நடித்திருக்கிறார்’ என்ற விமர்சனங்கள் குறித்தும் மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
இது பற்றிப் பேசிய அவர், “வசூல், பாராட்டுகள், நல்ல விமர்சனங்களை எல்லாம் தாண்டி இப்படம் ‘எல்லோரையும் கவலைகளை மறந்து மனசு விட்டுச் சிரிக்க வைத்திருக்கிறது’ என்பதுதான் எனக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விஷால் சார் உங்களிடம் ஒரு வேண்டுகோள். நாம் இருவரும் சேர்ந்து இனி இரண்டு படங்கள் பண்ணலாம், இல்லை 20 படங்கள்கூட பண்ணலாம். ஆனால், நமக்குள் இருக்கும் இந்த அன்பான உறவு எப்போதும் இருக்க வேண்டும். பலரும் பேசும் அவதூறான பேச்சுகளால் நம்முடைய இந்த உணர்வும், உறவும் மிஸ் ஆகிவிடக்கூடாது என்று உங்களிடம் அன்புடன் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இவ்வளவு பெரிய ஸ்கீரின் ஸ்பேஸ் தந்த உங்களின் பரந்த அன்பான மனதைப் பார்க்கும் போது ‘இவன்தான்டா ஹீரோ…’ என்று சொல்லத் தோன்றுகிறது” என்று கூறினார்.
மேலும், தன்னுடைய திரைப் பயணம் குறித்து உணர்வுபூர்வமாகப் பேசியவர், “ஒரு நல்ல நடிகனாக வேண்டும் என்று ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த போதிலிருந்து பல வருடமாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். நான் ஹீரோவாக நடித்த திரைப்படங்களான ‘நியூ’ 2004-லும், ‘அன்பே ஆருயிரே’ 2005-லும் வெளியானது. இரண்டு படங்களும் அடிச்சுப் பட்டையக் கிளப்பின. அன்றைக்கு டாப் ஸ்டார்களாக இருந்த படம் கோயமுத்தூரில் 1.4 கோடி ரூபாய்க்கு விற்றது என்றால், என்னுடைய ‘அன்பே ஆருயிரே’ படம் 1 கோடி ரூபாய்க்கு விற்றது. டாப்பில் இருந்தேன்.
ஆனால், கடவுள் மேலே போய் என்னை உட்கார வைத்துவிட்டு, அப்படியே கண்ணைப் பிடிங்கியது போல கீழே இறக்கிவிட்டார். அதன்பிறகு பல வருடங்கள் செத்துக் காணாமல் போனேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு `இசை’, `இறைவி’ என மீண்டு வந்தேன். `இறைவி’ திரைப்படத்திலிருந்து என் வாழ்க்கை மறுபடியும் ஆரம்பித்தது. கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி.
அதைத் தொடர்ந்து பல பெரிய இயக்குநர்கள் படத்தில் நடித்து ‘மாநாடு’ படம் வரை வந்தேன். இப்போது இந்த ‘மார்க் ஆண்டனி’ வரை வந்துள்ளேன்.
‘என்னை மிகவும் ரசித்த மக்கள் மனதில் மீண்டும் எனக்கு ஒரு நல்ல இடம் கிடைக்காதா’ என நான் அடிக்கடி கடவுளிடம் கேட்பேன். இந்த ‘மார்க் ஆண்டனி’ படம் மூலம் அது நடந்துள்ளது. நான் விட்ட இடத்தில் 70% இடத்தைப் பிடித்துவிட்டேன். ரசிகர்கள் தங்கள் மனதில் எனக்கு ஓர் அங்கிகாரம் கொடுத்திருக்கிறார்கள். அதைத் தவறவிடாமல் சரியாகப் பயன்படுத்தி இன்னும் கடுமையாக உழைத்து உங்களை மகிழ்ச்சியடைச் செய்வேன். நீங்கள் மகிழ்ச்சியடைவதைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைவேன். எனக்குள் இருந்து என்னை வழிநடத்தும் என் தாய்க்கும், தந்தைக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று உணர்வுபூர்வமாகப் பேசினார்.