Mark Antony: "AAA தோல்வியிலிருந்து மீண்டுவர கஷ்டப்பட்டேன்; விஷால் சார்தான்…"- ஆதிக் ரவிச்சந்திரன்

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இவரது முதல் படமான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ரசிகர்களிடையே நல்ல வரவேறபைப் பெற்றிருந்தது. இதையடுத்து இவர் இயக்கிய ‘ அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு சரியாக ஓடவில்லை, நெகடிவான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது இவர் இயக்கியுள்ள ‘மார்க் ஆண்டனி’  திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘மார்க் ஆண்டனி’ வெற்றி விழா

குறிப்பாக, எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு, ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை, நடிகை சில்க் ஸ்மிதாவின் காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மட்டுமல்ல தெலுங்கு ரசிகர்களிடையேயும் இப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றிருந்தது. இதுபற்றி பேசிய அவர், “வெற்றி பெற்ற இயக்குநர்களை நம்பி தயாரிப்பாளர்கள் படம் கொடுப்பது இயல்பு. ஆனால், என்னை மாதிரி தோல்வியடைந்த இயக்குநருக்கு படம் பண்ண வாய்ப்புக் கொடுத்ததற்கு என்னுடைய தயரிப்பாளருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். சினிமாவில் இருப்பவர்களுக்கு வெற்றி தோல்வி வருவது இயல்புதான், தோல்வியிலிருந்து மீண்டு வருவதும் இயல்புதான். எல்லாருக்கும், எல்லா வேலைகளிலும் கஷ்டங்கள் இருக்கிறது.

S.J.சூர்யா, விஷால்

என் இரண்டாவது (AAA) படத்தின் தோல்வியிருந்து மீண்டு வர ரொம்பவே கஷ்டப்பட்டேன். நான் அதிலிருந்து மீண்டு வர ஒரு உந்துதலாக இருந்தவர் விஷால் சார். கதை கேட்ட பின் விஷால் சார் என்னிடம், ‘பயங்கர பவர்ஃபுல்லான ஜாக்கி பாண்டியன் கதாப்பத்திரத்தை யார் பண்ணுவா!’ என்று கேட்டார். நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா சார் அதைச் சிறப்பாக செய்தார். அவருக்கு இவ்வளவு பெரிய ஸ்கீரின் ஸ்பேஸ் கொடுக்க ஒத்துக்கொண்ட விஷால் சாருக்கு என்னுடைய மிகப்பெரிய நன்றி. என்னைக்கு எஸ்.ஜே சூர்யா சார் இந்தப் படத்துக்குள்ள வந்தாரோ, அப்பவே எல்லாருக்கும் ஒரு பெரிய எனர்ஜி வந்துருச்சு. நான் களைப்பாக இருந்தாலும், எஸ்.ஜே சூர்யா சார் முழு எனர்ஜியுடன் இருந்து எல்லோருக்கும் எனர்ஜியைக் கொடுப்பார்.

விஷால் சாருக்கு 2 .5 மணிநேரமும், தயாரிப்பாளருக்கு 2.5 மணிநேரமும் கதை சொன்னேன். ஆனால், எஸ்.ஜே சூர்யா சாருக்கு மட்டும் 8 மணிநேரம் கதை சொன்னேன். பல கேள்விகள் கேட்டு அவ்வளவு நுட்பமாகக் கதைக் கேட்பவர் அவர். இதுதவிர கேமரா, தொழில் நுட்பம் என இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த வெற்றியை நான் சமர்பிக்கிறேன்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.