மும்பை மலாடு பகுதியில் கடந்த மாதம் 29-ம் தேதி தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் கணேஷ், பிரதிக் ஆகியோர் ரூ.75 லட்சம் ரூபாயை காரில் எடுத்துச் சென்றனர். அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது கார் மற்றும் பைக்கில் வந்த 5 பேர் அவர்களது வாகனத்தை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, 75 லட்சம் ரூபாய் இருந்த பணப்பையைப் பறித்துச் சென்றனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். பணத்தை வழிப்பறி செய்தது தொடர்பாக கம்பெனிக்காக பணத்தை எடுத்துச் சென்ற ஊழியர் பிரதிக்குக்கு இந்த வழிப்பறியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிரதிக் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தி அக்ஷய் சிவ் கெய்க்வாட், குணால் கெய்க்வாட், நரேஷ், சகன், தினேஷ், பிரதிக், வினோத் உட்பட 11 பேர் இவ்வழக்கு தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்தக் குற்றத்தில் கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் பாதி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. பாக்கி பணம் காட்கோபரைச் சேர்ந்த கரிஷ்மா முஜீப் என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. வழிப்பறியில் மூளையாகச் செயல்பட்ட தினேஷ், தனது பங்கு பணத்தை கரிஷ்மா என்ற பெண்ணிடம் கொடுத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. கரிஷ்மா, காட்கோபர் பகுதியில் மிகவும் பிரபலமானவர். அவர்மீது கொலை, வழிப்பறி, ஆயுத வியாபாரம் உட்பட ஏராளமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
மும்பை போலீஸாருக்கே தெரியாமல் கடந்த ஆறு ஆண்டுகளாக மும்பையில் தனிக்கூட்டத்தை வைத்துக்கொண்டு, கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார் கரிஷ்மா. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர், “கரிஷ்மாவை காட்கோபர் பகுதி மக்கள் அம்மா என்று அழைப்பது வழக்கம். அவர் தனக்குக் கீழ் சில கிரிமினல்களை வைத்துக்கொண்டு கொள்ளை, வழிப்பறி போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். தனக்குக் கீழ் வேலை செய்யும் கிரிமினல்களுக்குத் தேவையான நிதியுதவியைச் செய்வது, கைதானால் அவர்களை ஜாமீனில் எடுப்பது, சட்ட உதவிகள் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தார்.
தினேஷ் தனது பங்கு பணம் ரூ.43 லட்சத்தை தனது கூட்டாளி மெஹுல் என்பவனிடம் கொடுத்து கரிஷ்மாவிடம் கொடுத்துவிடும்படி கூறி, தன்னை ஜாமீனில் எடுக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.

மெஹுலிடம் கரிஷ்மா பணத்தை வாங்கிக்கொண்டு அவரை வெளியில் விட்டால் சிக்கலாகிவிடும் என்று கருதி, சில நாள்கள் தனது கட்டுப்பாட்டில் அவரை வைத்திருந்தார்.
கைதானவர்களிடம் விசாரணை நடத்தி கரிஷ்மாவைப் பிடித்து விசாரித்து, அவரைக் கைதுசெய்திருக்கிறோம். அவர் இன்னும் எந்தவித தகவலையும் சொல்லவில்லை. கரிஷ்மாவிடம் விசாரித்து வருகிறோம். வெறும் நான்காம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் கரிஷ்மா, சட்டவிரோத குடிசைகள் கட்டிக்கொடுக்கும் தொழில் மூலம் பொதுமக்களிடம் அறிமுகமானார். இதனால் அவருக்கு எதிரிகளும் அதிகரித்தனர். இதையடுத்து தனது பாதுகாப்புக்கு அடியாட்களை நியமித்துக்கொள்ள ஆரம்பித்தார். அப்படி நியமிக்கப்பட்ட முதல் அடியாளை திருமணமும் செய்துகொண்டார்.

உள்ளூர் மக்கள் கரிஷ்மாவைக் கண்டு, பயப்பட ஆரம்பித்தனர். அதோடு உள்ளூர் பிரச்னையை கரிஷ்மாவிடம் கூறி, அவற்றைத் தீர்த்து வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆதரவற்றவர்களுக்குத் தங்க இடம் கொடுத்து, சாப்பாடும் போட்டார். அப்படி அவரிடம் வந்து தங்குபவர்கள் கரிஷ்மாவுக்காக வழிப்பறியில் ஈடுபட ஆரம்பித்தனர். கொள்ளை மற்றும் வழிப்பறி செய்து கொண்டு வரும் பணத்தில், பாதியை தனக்கு எடுத்துக்கொண்டு, பாதியை குற்றத்தில் ஈடுபட்டவரிடம் கொடுத்துவிடுவார்.
கரிஷ்மா வெளியில் செல்லும்போது எப்போதும் இரண்டு இனோவா காரில் 12 பேர் துணையோடு செல்வது வழக்கம். செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரு சக்கர வாகனமும், வழிப்பறியில் ஈடுபடுபவர்களுக்கு நான்கு சக்கர வாகனமும் கரிஷ்மா கொடுப்பது வழக்கம். குடியிருப்பு கட்டடங்களில் விடுமுறைக்குச் செல்பவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க உளவாளிகளையும் கரிஷ்மா வைத்திருந்தார். தொடர் விசாரணையில் இன்னும் விவரங்கள் தெரியவரும்” என்று தெரிவித்தார்.