ஜனாதிபதி- மலேசிய பிரதமருக்கிடையில் சந்திப்பு

  • வலயத்தின் விரிவான பொருளாதார கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற இலங்கைக்கு உதவ மலேசியா தயார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மலேசிய பிரதமர் அன்வர் பின் இப்ராஹிமுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு (20) நியூயோர்க்கில் நடைபெற்றது.

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

இலங்கையின் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் மலேசிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்த பிரதமர் அன்வர் இப்ராஹிம், மலேசியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைசாதிடுவதற்கான இலங்கையின் கோரிக்கைக்கும் சாதகமான பதிலை வழங்கினார்.

அத்துடன், வலயத்தின் விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் (RCEP) அங்கத்துவம் பெறுவதற்கான இலங்கையின் கோரிக்கையை ஆதரவளிப்பதாக மலேசியப் பிரதமர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர ரிம் கூட்டமைப்பின் (IORA) பிராந்திய மாநாட்டில் மலேசிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பார் எனவும் பிரதமர் அன்வர் பின் இப்ராஹிம் உறுதியளித்தார்.

மலேசியாவிற்கு விஜயம் செய்யுமாறு மலேசிய அரசரின் அழைப்பை மலேசிய பிரதமர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அடுத்த வருடம் மலேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி மொஹான் பீரிஸ் ஆகியோரும் மலேசிய தூதுக்குழுவுடனான சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.