விஜயவாடா: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனுவை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேநேரம், 2 நாட்கள் சிஐடி காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2018-ல் சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி முறைகேடு நடந்ததாக கூறி, சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் கடந்த 9-ம் தேதி கைது செய்தனர். விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அவருக்கு 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தது. இதையடுத்து, ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்க கோரி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சித்தார்த் லூத்ரா, சித்தார்த் அகர்வால் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்திலும், ஆந்திர உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர். மனுவை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே, விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அவரது நீதிமன்ற காவலை மேலும் 2 நாட்கள் நீட்டித்து நேற்று உத்தரவிட்டது.
பின்னர், சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கும் இதே நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது. 2 நாட்கள்(செப்.23, 24) மட்டும் அவரை சிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க பல்வேறு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.