பெங்களூரு: உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த 29 வயது இளைஞர், உலக கோப்பையில் விளையாட உள்ள நெதர்லாந்து அணி வீரர்களின் பயிற்சிக்கு பந்துவீசுவதற்கு தேர்வாகியுள்ளார்.
இந்தியாவில் கிரிக்கெட் மோகம் எப்போதும் உச்சத்தில் இருக்கும். நாட்டில் பெரும்பாலானோர் விரும்பும் விளையாட்டாக இருந்தாலும், கிரிக்கெட் வீரர்களாக அவர்கள் மாநில, தேசிய அணிகளில் இடம்பெறுவது மிகவும் கடினம்.
அணியில் இடம்பிடிக்க அதிகமான போட்டி நிலவுவதால், பலரது கனவு கனவாகவே இருக்கின்றன. அப்படி இருக்கையில் சென்னையை சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் 29 வயதான லோகேஷ் குமார் என்பவர் உலக கோப்பையில் விளையாடும் நெதர்லாந்து அணியில் ஒரு அங்கமாக இருக்க தேர்வாகியுள்ளார்.
வரும் அக்.,5ம் தேதி இந்தியா நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணியும் விளையாட இருக்கிறது. பொதுவாக இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும்.
இதற்காக நெதர்லாந்து அணி சார்பில், ‘எங்கள் அணிக்கு நெட் பவுலராக இந்திய பந்துவீச்சாளர்கள் தேவை’ என விளம்பரம் செய்யப்பட்டது. அதாவது, அந்நாட்டு வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசி பயிற்சி செய்ய பந்துவீச்சாளர்களை கோரியது. இதற்காக சுமார் 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 4 பேரை மட்டும் நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.
அவர்களில் ஒருவர் தான் சென்னையை சேர்ந்த லோகேஷ் குமார். உணவு டெலிவரி செய்துவந்த இவர், கிரிக்கெட்டில் நல்ல நிலையை எட்ட வேண்டும் என்ற கனவுடன் கிடைக்கும் நேரத்தில் விளையாடி வந்தார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஐந்தாவது டிவிஷனுக்கு 4 ஆண்டுகள் விளையாடியுள்ள லோகேஷ் 4வது டிவிஷனுக்கு விளையாட பதிவு செய்திருக்கிறார். ஐ.பி.எல்., போட்டியில் விளையாட வேண்டும் என்ற ஆசையுடன் இருந்துள்ளார். அந்த நேரத்தில் விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்த அவருக்கு நெதர்லாந்து அணி வாய்ப்பளித்துள்ளது.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான லோகேஷ், நெதர்லாந்து அணியால் மர்ம சுழற்பந்து வீச்சாளராக பெயரிடப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்தியா வந்துள்ள நெதர்லாந்து அணி, பெங்களூருவில் உள்ள ஆலூரில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. தேர்வான 4 பேரும் நெதர்லாந்து அணியுடன் இணைந்து பயிற்சிக்காக பந்து வீசி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய லோகேஷ் குமார், “நெதர்லாந்து அணிக்கு நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். எனது திறமை இங்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து அணி தனக்கு நல்ல வரவேற்பு அளித்ததோடு, அந்த அணியின் குடும்ப உறுப்பினராகிவிட்டேன்” என்று தெரிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வர்
1. ஹேமந்த் குமார் (ராஜஸ்தான் – இடதுகை வேகப்பந்து வீச்சாளர், முன்பு ஐ.பி.எல்.,-ல் பெங்களூரு அணிக்காக நெட் பவுலராக இருந்தார்)
2. ராஜாமணி பிரசாத் (தெலுங்கானா – இடதுகை வேகப்பந்து வீச்சாளர், மாநில ரஞ்சி அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெட் பவுலராக பணியாற்றினார்)
3. ஹர்ஷா சர்மா (ஹரியானா – இடதுகை சுழற்பந்து வீச்சாளர், ராஜஸ்தான் ராயல்ஸ் நெட் பவுலர்)
4. லோகேஷ் குமார் (தமிழகம் – சுழற்பந்து வீச்சாளர்)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்