மதுரை: ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் கார்வேந்தன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பட்டியலினத்தில் உள்ள பள்ளர் , பண்ணாடி, வாதிரியான், காலடி, குடும்பன், கடையன் மற்றும் தேவேந்திரகுலத்தான் ஆகிய ஜாதியினரை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் 2019-ல் தமிழக அரசு குழு அமைத்தது.
இந்தக்குழு பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்திய போது பெயர் மாற்றத்துக்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்த ஆட்சேபத்தை கருத்தில் கொள்ளாமல் பெயர் மாற்றம் செய்ய குழு பரிந்துரை அனுப்பியது. இந்த பரிந்துரை ஏற்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கருத்து கேட்பு கூட்டங்களில் வேளாளர் பெயர் மாற்றத்துக்கு வேளாளர் சமூகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை ஹன்ஸ்ராஜ் வர்மா குழு கண்டுகொள்ளவில்லை. பாரபட்சம் இல்லாமல், நியாயமாக விசாரணை நடத்தாமல் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுடன் ஹன்ஸ்ராஜ் வர்மா குழு செயல்பட்டது. அந்தக்குழு நியாயமற்ற முறையில் நடந்து கொண்டது.
குழு அமைக்கப்பட்ட 3 நாளில் முதல் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியுள்ளார். இது குறித்து பொதுமக்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. கூட்ட நடவடிக்கைகளை ரகசியமாக வைத்துள்ளார். இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பணி விதிகளை மீறிய செயலாகும்.
இதன் மூலம் ஹன்ஸ்ராஜ் வர்மா தமிழகத்தில் வாழும் 1.5 கோடி வேளாளர் சமுதாய மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார். இதற்காக ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் குழு உறு்ப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் ஹன்ஸ்ராஜ் வர்மா மீது வழக்கு தொடர அனுமதி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா அரசு அளித்த பணியை மேற்கொண்டுள்ளார். இதனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.