Sreeshanth On Gambhir Comment: மகேந்திர சிங் தோனி என்றாலே கூல் கேப்டன் என்ற வாசகமும் இந்திய அணிக்கு மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தவர் என்ற புகழாரமுமே அனைவரிடத்தில் இருந்தும் வரும். ஆனால், அவர் கேப்டனாக 2007ஆம் ஆண்டில் பொறுப்பேற்பதற்கு முன்பே அதிரடி பேட்டர் என்ற பெயரை சம்பாதித்துவிட்டார், எனலாம்.
தோனி குறித்து கம்பீர்
சௌரப் கங்கூலியின் கேப்டன்ஸியின் கீழ் அறிமுகமான தோனி, ஒருகட்டத்தில் போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் வல்லமையை பெற்றார். தொடர்ந்து, அவரின் முன்னுதாரணமற்ற ஷாட் செலக்சன் போன்றவை அவரின் பேட்டிங் பாணியை தனித்துவமான ஒன்றாக மாற்றியது. அவர் வெற்றிகரமான பேட்டராக வலம் வந்துகொண்டிருந்த நேரத்தில், 2007ஆம் ஆண்டில் கேப்டன் பொறுப்பை பெற்றுக்கொண்டார்.
அதன்பின்னர், அவர் தொடர்ந்து பின்வரிசையிலேயே அதிகம் விளையாடி வந்தார். அந்த வகையில், கௌதம் கம்பீர் சில நாள்களுக்கு முன் தோனி கேப்டனாக பொறுப்பேற்றதால் அவரின் பேட்டிங்கை தியாகம் செய்தார் என்றும், அவர் கேப்டனாக இல்லாமல் டாப்-ஆர்டரில் விளையாடியிருந்தால் அவர் இன்னும் ரன்களை அடித்திருப்பார் என கூறியிருந்தார்.
தியாகம் செய்யவில்லை, ஆனால்…
இந்நிலையில், கௌதம் கம்பீர் கூறிய கருத்தின் மீது இந்திய மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,”3வது இடத்தில் பேட்டிங் செய்திருந்தால் தோனி அதிக ரன்கள் எடுத்திருப்பார் என்று கௌதம் கம்பீர் சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால் தோனிக்கு எப்போதும் அதிக ரன்களை விட அதிக வெற்றிகள் தான் முக்கியமாக இருந்தது. அணிக்குத் தேவைப்படும்போது ஆட்டங்களை முடிக்கும் திறன் அவருக்கு எப்போதும் இருந்தது, மேலும் அவர் இரண்டு உலகக் கோப்பைகளையும் வென்று கொடுத்தார்.
அதற்கான கிரெடிட் தோனிக்குத்தான் போக வேண்டும், ஆனால் அவர் தனது பேட்டிங் நிலையை தியாகம் செய்யவில்லை. எந்தெந்த வீரர்கள் எந்த நிலையில் அணிக்காக சிறப்பாக செயல்படுவார்கள் என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப அவர்களை அந்த இடங்களுக்கு இடமாற்றம் செய்தார். அவரது கேப்டன்ஷிப்பில் சிறந்த வீரர்களை வெளியே கொண்டு வரும் திறன் இருந்தது. அவர் எப்போதும் அணியைப் பற்றிதான் முதலில் சிந்தித்தார்” என தெரிவித்தார்.
கேப்டனும், பேட்டரும்…
மகேந்திர சிங் தோனி கடந்த 2020ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றிருந்தாலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தற்போது வரை தொடர்கிறார். ஏற்கெனவே, ஓய்வுக்கு முன் 2010, 2011, 2018 ஆகிய ஐபிஎல் கோப்பைகளை தோனியின் தலைமையில் சிஎஸ்கே வென்றிருந்தது. அதேபோல, ஓய்வுக்கு பின்னரும் 2021, 2023 சாம்பியன் பட்டத்தையும் தோனியின் தலைமையில் சிஎஸ்கே வென்றது.
பேட்டிங்கை பொறுத்தவரை தோனி, 90 டெஸ்ட் போட்டிகளில் (144 இன்னிங்ஸ்) விளையாடி 6 சதங்கள், 33 அரைசதங்கள் உள்பட 4,876 ரன்களையும்; ஒருநாள் அரங்கில் 350 போட்டிகளில் (297 இன்னிங்ஸ்) 10 சதங்கள், 73 அரைசதங்கள் உள்பட 10,773 ரன்களையும்; சர்வதேச டி20 போட்டிகளில் 98 போட்டிகளில் (85 இன்னிங்ஸ்) 1,617 ரன்களையும் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் 250 போட்டிகளில் விளையாடி (218 இன்னிங்ஸ்) 5,082 ரன்களையும் எடுத்துள்ளார்.