மேட்டூர்: தமிழக – கர்நாடக எல்லையான பாலாறு வனச்சாலையில் மண்சரிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து பாலாறு வழியாக மைசூருக்கு செல்ல வேண்டும். இதில் காரைக்காடு முதல் பாலாறு சோதனைச்சாவடி வரை சுமார் 5 கீ.மீ சாலை ஈரோடு வனக்கோட்டம் சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு ஒட்டி மாநில நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலை சேலம் மாவட்டம் எடப்பாடி கோட்டம் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வனப்பகுதியில் யானை, மான், குரங்குகள் நடமாட்டமும் இருந்து வருகிறது.
இந்நிலையில், மேட்டூர் மற்றும் தமிழக – கர்நாடக நீர்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அடுத்த சென்னம்பட்டி வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் பாலாறு செல்லும் வனச்சாலையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளது. இதனால் வனப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு, சிறு, சிறு பாறைகள் மற்றும் கற்கள் உருண்டு சாலையில் வந்து விழுந்துள்ளன.
மேலும், சில பகுதியில் மண் சரிவு காரணமாக, பாலாறு வனச்சாலையில் பல்வேறு இடங்களில் மண்ணால் மூடப்பட்டுள்ளன. இந்த மண் சரிவால் மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலை, மைசூர் செல்லும் பேருந்துகள், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் குவிந்து கிடந்த மண்ணில் ஒரு வித பயத்துடன் தடுமாறி தடுமாறி செல்கின்றன. எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் சாலையில் உள்ள மண் மற்றும் பாறைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.