புதுடெல்லி: “மகளிர் இடஒதுக்கீடு மசோதா சாராதண சட்டம் அல்ல; அது புதிய இந்தியாவுடைய புதிய ஜனநாயகத்தின் உறுதிமொழி” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகளிர் இடஓதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவின் மகிளா மோர்ச்சா நடத்திய பாராட்டு விழா கூட்டத்தில் பிதரமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நான் இந்தியாவின் தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் ஆகியோருக்கு எனது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன். செப்டம்பர்.21, 22 ஆகிய தேதிகளில் இருந்து புதிய வரலாறு உதயமாகியிருப்பதை நாம் காண்கிறோம்.
இந்த வரலாற்றை உருவாக்க மக்கள் நமக்கு முன்னுரிமை கொடுத்து வாய்ப்பளித்துள்ளனர். சில முடிவுகள் மட்டும்தான் நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் வல்லமை கொண்டது. அப்படியான ஒரு முடிவுக்கு நாம் சாட்சிகளாகி இருக்கிறோம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் மசோதா தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருப்பது பெரும்பான்மை பெற்ற அரசின் வலிமையை மீண்டும் நிரூபித்துள்ளது.
யாருடைய சுயநலமும் மகளிர் மசோதாவை தடை செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தேசத்தை முன்னெடுத்துச் செல்ல தீர்க்கமான முடிவுகளை எடுக்க பெரும்பான்மையான, வலிமையான அரசு வேண்டும் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் நிரூபித்துள்ளது” என்று தெரிவித்தார்.
கடந்த 1999, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டும் நிறைவேறாமல் போனது. 2010-ம் ஆண்டில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஆனால், மக்களவையில் நிறைவேறவில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்தின் 2-வது நாள் நிகழ்வுகள், புதிய நாடாளுமன்றத்தில் நடந்தன.
அப்போது முதல் மசோதாவாக, மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்துக்கு பிறகு, உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்த நிலையில், கடந்த 20-ம் தேதி (நேற்று முன்தினம்) இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
அதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று தாக்கல் செய்தார். மக்களவை, மாநிலங்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் தற்போது 15 சதவீதத்துக்கு குறைவாகவே உள்ளது. பல மாநிலங்களின் சட்டப்பேரவையில் பெண்களின் பங்கு 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இந்நிலையில், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு கட்சி வேறுபாடின்றி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.
எனினும், வரும் 2024 மக்களவை தேர்தலில் இது அமலுக்கு வராது. தேர்தலுக்குபிறகு, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்து, அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து, அதன்பிறகு நடக்கும் தேர்தலில்தான் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.