ஆந்திரா,
சினிமாவில் அதிரடி காட்சிகளில் தூள் பறக்க விடுபவர் தெலுங்கு நடிகர் பாலைய்யா. இவரின் மிரட்டலான ஆக்சன் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏ ஆக உள்ளார். இவர் தனது மிரட்டலான ஆக்சனை ஆந்திர சட்ட சபையிலும் காட்டியுள்ளார்.
முன்னாள் ஆந்திரா முதல் அமைச்சரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் உறுப்பினர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் ஆந்திர சட்ட சபையிலும் எதிரொலித்தது.
சந்திர பாபு நாயுடு கைதை கண்டித்து சட்ட சபையில் காகித தாள்களை எரிந்தும் கோஷங்களையும் எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனர். இதில் நடிகர் பாலைய்யா சினிமாவில் நடிப்பதை போல மீசையை முறுக்கி தொடையை தட்டி ஆவேசமாக பேசினார். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு பதிலடியாக ஆந்திர நீர்வளத்துறை அமைச்சர் அம்பாதி ராம் பாபு, இது மாதிரியான செயல்களை சினிமாவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார். இதனைக் கேட்ட அவையில் இருந்த பெண் எம்எல்ஏக்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இதனால் அமைச்சரை பார்த்து தில் இருந்தால் இந்த பக்கம் வா என பாலைய்யா கூற, அதற்கு அமைச்சர் உனக்கு தில் இருந்தால் நீ இந்த பக்கம் வா என்று கூற சபை களேபரம் ஆனது.
பின்னர் இது போன்ற செயல்கள் சபையின் மாண்பை சீர்குலைக்கும் என்ற கூறிய சபாநாயகர் , தெலுங்கு தேசம் கட்சி எம் எல் ஏ க்கள் 15 பேரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.