Online Scam: இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர், மோசடிக்காரர்களிடம் ரூ. 57 லட்சத்தை இழந்தார். மேலும் அவருடைய சிம் நம்பரை துண்டித்து வேறொருக்கு மாற்றிய பிறகு, வங்கியில் கொடுத்திருந்த தனது தொலைபேசி எண்ணை புதுப்பிக்க அவர் மறந்துவிட்டார்.
வங்கி ஊழியரும் கைது
இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா காவல்துறையினர் சமீபத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சுக்ஜித் சிங் என்ற குற்றவாளி அதே பகுதியில் இயங்கும் ஹெச்டிஎஃப்சி வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்தார். மேலும், கைது செய்யப்பட்டவர்களில் பீகாரைச் சேர்ந்த லவ் குமார், காஜிபூரைச் சேர்ந்த நிலேஷ் பாண்டே மற்றும் டெல்லியைச் சேர்ந்த அபிஷேக் ஆகியோர் அடங்குவர்.
ரூ. 57 லட்சம்
இந்த மோசடி செய்பவர்கள் ராமன்தீப் எம் கிரேவால் என்ற வெளிநாட்டு வாழ் இந்தியரை குறிவைத்து, அவரது பழைய துண்டிக்கப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.57 லட்சத்தை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், முதியவர்கள் மற்றும் செயலற்ற கணக்கு வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட நபர்களின் விவரங்களை முதலில் தேடி கண்டெடுத்து இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர். அவர்களது ஆராய்ச்சியின் போது, பாதிக்கப்பட்ட ராமன்தீப் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற முடிந்தது. அவருடைய இணைக்கப்பட்ட மொபைல் எண் துண்டிக்கப்பட்டு, பின்னர் வேறொருவருக்கு மீண்டும் வழங்கப்பட்டது.
பக்கா பிளான்
அதாவது, ராம்ன்தீப் அவரின் அந்த மொபைல் சிம் தொலைந்து உடன் பிளாக் செய்துள்ளார். அதனால், அவரின் நம்பர் வேறொருவருக்கு கொடுக்கப்பட்டது. இதனை அறிந்துகொண்ட மோசடி நபர்கள், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களால் தொலைபேசி எண்ணை மீண்டும் வழங்கிய நபரிடம் மோசடி செய்பவர்கள் முதலில் தொடர்பு கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த நபர் இப்போது ராமன்தீப் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட அதே தொலைபேசி எண்ணைப் பயன்படுத்துகிறார். மோசடி செய்பவர்கள் ராமன்தீப்பின் மொபைல் எண்ணை பெற்ற புதிய உரிமையாளருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தங்களிடம் சிம் கார்டை கொடுத்துவிடுமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதன் மூலம், அவர்கள் அந்த அடையாள ஆவணங்களைப் பெற்று, இறுதியில் அந்த எண்ணை தங்களுக்கு போர்ட் செய்து கொண்டனர்.
நெட் பேங்கிங் மூலம் பண பரிமாற்றம்
பின்னர் அந்த தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, மோசடி செய்பவர்கள் ராமன்தீப் வங்கி கணக்கிற்கு வரும் OTP-களை பெற்று, நெட் பேங்கிங்கை ஹேக் செய்து, இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை மாற்றி, நெட் பேங்கிங் மூலம் புதிய டெபிட் கார்டை ஆர்டர் செய்தனர். பின்னர் அவர்கள் தொலைபேசி எண் மற்றும் பிற விவரங்களைப் பயன்படுத்தி ராமன்தீப் கணக்கில் இருந்து மோசடி செய்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் மூன்று வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றினர்.
அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைக் கண்டறிந்த பிறகு, ராமன்தீப் காவல்துறையில் புகார் அளித்தார். போலீசார் ரூ.17.35 லட்சத்தை மீட்டு, பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.7.24 லட்சத்தை முடக்கினர், மேலும் ஒரு மேக்புக் ஏர், நான்கு மொபைல் போன்கள், 3 காசோலை புத்தகங்கள் மற்றும் எட்டு ஏடிஎம் டெபிட்/கிரெடிட் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.