அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியிருந்த ‘கார்கி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் ஜோடியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் பூஜையின் போது நடிகை சாய் பல்லவியும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த சிலர் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டதாக இணையத்தில் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சாய் பல்லவி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருந்த பதிவில், “ நான் வதந்திகளை கண்டுகொள்வது இல்லை அதை பற்றி கவலைப்படுவதும் இல்லை. ஆனால் அந்த வதந்தி குடும்ப நண்பர்களை உள்ளடக்கி இருந்தால் கண்டிப்பாக அதை பற்றி நான் பேசியாக வேண்டும். என் படப்பிடிப்பு பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வேண்டுமென்றே எடிட் செய்து பணதிற்காக கேவலமான நோக்கத்துடன் பரப்பி வருகின்றனர்.
என் அடுத்தடுத்த படம் குறித்த மகிழ்ச்சியான தகவல்களை வெளியிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது இதுபோன்ற அர்த்தமற்ற செயல்களுக்கு விளக்கமளிப்பது வேதனையாகவுள்ளது” என்று பதிவிட்டிருக்கிறார்.