கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை; மூன்று இளம்பெண்கள் உட்பட ஐவர் கைது
கோவை : கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய, இளம்பெண்களை ஈடுபடுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கல்லுாரி மாணவர்களிடையே கஞ்சா, போதை மாத்திரை பழக்கம் அதிகரித்து வருகிறது. தடுக்க, மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இருப்பினும், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் போதைப் பொருட்களை, கடத்தல் கும்பல் பல்வேறு வழிகளில் மாணவர்களிடையே கொண்டு சேர்க்கிறது. தற்போது, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய, இளம்பெண்களை பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில், தனியார் கல்லூரி அருகே சிலர் கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சரவணம்பட்டி போலீசார் அப்பகுதியில், தீவிர சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் இருந்த மூன்று இளம்பெண்கள் உட்பட ஐந்து பேரிடம், சோதனை நடத்தினர். அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.
விசாரணையில் அவர்கள், கோவை காளப்பட்டி ரோடு ரைஸ்மில் தெருவை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் ஜனார்த்தனன், 21, காளப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் சபரீஷ், 19, கோவில்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த கோகுல் மனைவி பி.எஸ்.சி.,(ஐ.டி.,) பட்டதாரி லோகேஷ்வரி, 23, சரவணம்பட்டி ஜனதா நகரை சேர்ந்த பிஎஸ்சி., பட்டதாரி ஆசினா, 21, கோவில்பாளையத்தை சேர்ந்த பி.காம்., பட்டதாரி சந்தியா, 20 எனத் தெரிந்தது.
கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக, கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஐந்து பேரையும் சிறையில் அடைத்தனர்.
பயன்படுத்தி விற்பனை
போலீசார் கூறுகையில், ‘ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, கஞ்சாவை வாங்கி இங்குள்ள கல்லுாரி மாணவர்களுக்கு, விற்பனை செய்துள்ளனர். இவர்கள் மீது பழைய வழக்குகள் எதுவும் இல்லை. கஞ்சா கடத்தல் கும்பல், கல்லுாரி மாணவர்கள் போல் உள்ள மாணவர்கள், பட்டதாரி பெண்களை ஈடுபடுத்தியுள்ளனர். போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க, இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரிந்துள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர்.
கள்ளப்படகில் மீண்டும் இலங்கை செல்ல முயன்ற பேராசிரியர் கைது
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு அகதியாக வந்த இலங்கை உதவிப் பேராசிரியர் கிேஷாகரன் 30, மீண்டும் கள்ளப்படகில் இலங்கை செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.
இலங்கை மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த கிஷோகரன் அங்கு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்தார். அவரை பண மோசடி வழக்கில் 3 மாதம் மட்டக்களப்பு சிறையில் போலீசார் அடைத்தனர். இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அங்கிருந்து கள்ளப்படகில் செப்.,18ல் தனுஷ்கோடிக்கு அவர் அகதியாக வந்திறங்கினார். அவரை மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் போலீசார் தங்க வைத்தனர்.
இந்நிலையில் முகாமில் தங்க விருப்பம் இல்லாத கிஷோகரன் கள்ளத்தனமாக படகில் மீண்டும் இலங்கை செல்ல முடிவு செய்தார். நேற்று அதிகாலை முகாமில் இருந்து வெளியேறிய கிஷோகரன் தனுஷ்கோடி கடற்கரையில் திரிந்தார். அதையறிந்து கிஷோகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்
முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தில் குடும்பத்தகராறில் மனைவி லட்சுமியை 30, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் செல்வம் 34, போலீசில் சரணடைந்தார்.
திருவரங்கம் செல்வத்துக்கும், லட்சுமிக்கும் 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். செல்வம் அடிக்கடி மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஐந்து ஆண்டுகளாக இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்தனர்.
சென்னையில் வேலை செய்த செல்வம் நேற்று ஊருக்கு வந்தார். மதியம் 2:00 மணிக்கு 100 நாள் வேலைக்கு சென்று விட்டு டூவீலரில் லட்சுமி தெற்கு தெரு அருகே சென்றார். செல்வம் அவரை மண்வெட்டியால் வெட்டி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதில் லட்சுமி சம்பவயிடத்தில் துடிதுடித்து இறந்தார். பின் செல்வம் போலீசில் சரணடைந்தார். இன்ஸ்பெக்டர் கண்மணி அவரை கைது செய்து விசாரிக்கிறார்.
இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.11.40 லட்சம் மோசடி
கோவை: கோவை காளப்பட்டி ரோடு, நேரு நகரை சேர்ந்தவர் அகிலா, 35, ஐ.டி., ஊழியர். இவரது வாட்ஸாப் எண்ணுக்கு, கடந்த மாதம், ‘டிஜிட்டல் ஓஷன்’ என்ற நிறுவனத்தில் இருந்து வந்த செய்தியில், பகுதி நேரமாக ஆன்லைன் வாயிலாக வேலை செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, குறிப்பிடப்பட்டு இருந்தது. அகிலா அவ்வாறு செய்த போது, 150 ரூபாய் கிடைத்தது.
அதை தொடர்ந்து, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதன் வாயிலாக, அதிக லாபம் பெறலாம் என கூறினர். அதை நம்பிய அகிலாவுக்கு 3,100 ரூபாய் கமிஷனாக கிடைத்தது. தொடர்ந்து அவர் பல தவணைகளாக 11.40 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார்.
ஆனால் பணம் எதுவும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும், திரும்ப பெற முடியவில்லை; நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் அகிலா புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
சென்னை : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 30,000 ரூபாய் அபராதம் விதித்து,’போக்சோ’ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, 16 வயது சிறுமியின் பெற்றோர், கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில், கடந்த 2014ம் ஆண்டு புகார் ஒன்றை அளித்தனர்.
அதில், தன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டு இருந்தார்.
புகாரின்படி போலீசார், பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள,’போக்சோ’ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் நிரூபனமாணதை தொடர்ந்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 30,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
வயதான தம்பதியை கட்டிப்போட்டு 75 சவரன், ரூ.3.5 லட்சம் கொள்ளை
வில்லிவாக்கம் : வில்லிவாக்கம், சிட்கோ நகர், இரண்டாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சோழன், 66. இவர், கட்டுமான தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி வனஜா, 60. இவர்களது இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோருக்கு திருமணமாகி, வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர்.
வீட்டின் தரை தளத்தில் தனியாக வசிக்கும் தம்பதி, நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் துாங்கியுள்ளனர்.
நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் கதவை தட்டும் சத்தம் கேட்டதால், சோழன் கதவைத் திறந்துள்ளார்.
அப்போது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் ஐந்து பேர் உள்ளே நுழைந்து கத்தி, இரும்புக் கம்பிகளால் தம்பதியரை சரமாரியாக தாக்கி, கத்தி முனையில் இருவரையும் கட்டியுள்ளனர். பின், பீரோவில் இருந்த 75 சவரன் நகை, 3.50 லட்சம் ரூபாயை பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பின், சோழன் தன் மனைவி உதவியுடன் கட்டை அவிழ்த்து, அவரையும் விடுவித்து உள்ளார்.
தகவலின்படி வந்த வில்லிவாக்கம் போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும், தனிப்படை அமைத்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்