சென்னை: சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கலன்களுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர், ‘பிரக்யான்’ ரோவர் வாகனம் கடந்த ஆக.23-ம் தேதி நிலவின் தென் துருவப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டன. இவை 12 நாட்கள் ஆய்வு செய்து பல அரிய தகவல்களை நமக்கு அனுப்பின. அதன்மூலம் நிலவின் வெப்பநிலை, அங்குள்ள தனிமங்கள், நில அதிர்வின் தன்மைஉட்பட முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டன.
இதற்கிடையே நிலவின் தென்துருவப் பகுதியில் இரவு சூழல் வந்துவிட்டதால் லேண்டர், ரோவர் கலன்களின் இயக்கமானது முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டு அவை உறக்க நிலையில் (ஸ்லீப் மோடு) வைக்கப்பட்டன. தென்துருவப் பகுதியில் செப்.22-ம் தேதி பகல்பொழுது வந்தபின் அவை தானாகவே விழித்தெழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு வானிலை சூழல்கள் சாதகமாக அமைய வேண்டும் எனவும் இஸ்ரோ அறிவித்திருந்தது.
அந்தவகையில் நிலவின் தென்துருவத்தில் நேற்று முன்தினம் முதல் சூரிய ஒளி விழத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திட்டமிட்டபடி உறக்க நிலையில் உள்ள லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள் விழித்தெழிந்துவிட்டதா என்பதை அறிவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று ஈடுபட்டனர். ஆனால், லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இருப்பினும், தொடர்ந்து லேண்டருடன் தகவல் தொடர்பு ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தனது ட்விட்டர் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் கலன்கள் உறக்கத்தில் இருந்து இயல்புநிலைக்கு திரும்பிய நிலையை அறிய அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை அவைகளிடம் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன’’ என்று கூறப்பட்டுள்ளது.
நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரிக்கு மேலாக குளிர் நிலை இருக்கும். அதனால் லேண்டர், ரோவரில் உள்ள சாதனங்கள் கடுமையான குளிர் சூழலில் ஏதேனும் சேதமடைந்துள்ளதா? என்ற ரீதியிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.