திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வந்த மோகன்ராஜ், அவரின் சகோதரர் செந்தில்குமார், மோகன்ராஜின் தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினம்பாள் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு முன் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கையில், கள்ளக்கிணறு பகுதியில் வசித்த திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற ராஜ்குமார், அவரின் நண்பர்களான செல்லமுத்து, சோனை முத்தையா ஆகியோர் கள்ளக்கிணறு பகுதியிலுள்ள மோகன்ராஜின் தோட்டத்தில் அமர்ந்து மது அருந்தியிருக்கின்றனர். இதைத் தட்டிக் கேட்டதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் உள்ளிட்ட மூவர் மோகன்ராஜ், செந்தில்குமார், புஷ்பவதி, ரத்தினமாள் ஆகிய நான்கு பேரையும் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த பல்லடம் போலீஸார் சம்பவம் நிகழ்ந்த ஞாயிற்றுக்கிழமை இரவே, செல்லமுத்துவைக் கைதுசெய்தனர். தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளிகளான வெங்கடேஷையும், சோனை முத்தையாவையும் தேடிவந்தனர். இந்த நிலையில், விசாரணைக்காக கொலை நிகழ்ந்த கள்ளக்கிணறு பகுதிக்கு செல்லமுத்துவை போலீஸார் அழைத்துச் சென்றபோது, அவர் தப்ப முயன்றதில் வழுக்கி விழுந்து காலில் முறிவு ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கொலை தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாகயிருக்கும் வெங்கடேஷ், சோனை முத்தையாவை போலீஸார் தேடிவந்தனர். மேலும், இந்தக் கொலைக்கு உதவியதாக வெங்கடேஷின் தந்தை ஐயப்பனை போலீஸார் கைதுசெய்தனர். இதையடுத்து, சில நாள்களில் வெங்கடேஷும், சோனை முத்தையாவும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த நிலையில், கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை எடுப்பதற்காக வெங்கடேஷை கள்ளக்கிணறு பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, போலீஸார் மீது கற்களை வீசித் தாக்கிவிட்டு வெங்கடேஷ் தப்ப முயன்றதாகவும், அப்போது பாதுகாப்புக்காக சுட்டதில் வெங்கடேஷின் இரண்டு கால்களில் குண்டு பாய்ந்தாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலை வழக்கில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் 5-ம் நபராக முக்கியக் குற்றவாளியான வெங்கடேஷின் சகோதரரான செல்வம் என்பவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். இது தொடர்பாக பல்லடம் போலீஸார், “இந்தக் கொலையில் ஈடுபட்ட வெங்கடேஷ், சோனை முத்தையாவைத் தப்பிக்கவைக்க செல்வம் உதவியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரம் பகுதியில் வைத்து செல்வம் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செல்வம் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் மூலம் நால்வர் கொலையில் ஈடுபட்ட மற்றும் உதவியவர்கள் என மொத்தம் ஐந்து பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில், முக்கியக் குற்றவாளியான வெங்கடேஷ் மற்றும் அவரது தந்தை மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. மற்ற இரண்டு குற்றவாளிகளான செல்லமுத்து, சோனை முத்தையா இருவரும் இக்கொலைக்கு முக்கிய உடந்தைகளாக இருந்துள்ளனர். இதையடுத்து, இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையையேற்று திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.” எனத் தெரிவித்தனர்.