சென்னை: தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் உள்ள நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
பாஜக தேசிய தலைமையின் அழைப்பை ஏற்று, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 14-ம் தேதி டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சுமார் 20 தொகுதிகளில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் அமித் ஷா கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த நிபந்தனைகளை பழனிசாமி ஏற்கவில்லை என்று தெரிகிறது.
அதேநேரம், அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில், அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் கடந்த 18-ம் தேதி தெரிவித்தார்.
இந்நிலையில், அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் கடந்த 22-ம் தேதி டெல்லி சென்று, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, அண்ணாமலையின் பதவியை பறிக்க வலியுறுத்தியதாகவும், அதை அவர் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 3.45 மணிக்கு நடக்க உள்ளது.
இதில், மக்களவை தேர்தல் கூட்டணி, பாஜக உடனான உறவு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.