விஜயவாடா,
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சந்திரபாபு நாயுடுவை காவலில் வைத்து மேல் விசாரணை நடத்த சி.ஐ.டி. போலீசாருக்கு விஜயவாடா நீதிமன்றம் 2 நாட்களுக்கு அனுமதி வழங்கி இருந்தது. இரண்டு நாளும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து 9 சி.ஐ.டி. அதிகாரிகள் கொண்ட குழு ராஜமுந்திரி மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது.
சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மேலும் விசாரணைக்காக சந்திரபாபு நாயுடுவின் காவலை நீட்டிக்குமாறு சிஐடி நீதிமன்றத்தில் கோரியது.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.