இந்தூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டி தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
ஸ்ரேயாஸ், சுப்மன் கில் அதிரடி சதம் அடிக்க, கேப்டன் லோகேஷ் ராகுல், சூர்யகுமார் அரைசதம் எடுக்க இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. அடுத்த விளையாடிய ஆஸி., அணி28.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனையடுத்து இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி இன்று (செப்.,24) மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடந்தது. ‛டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா முதலில் களமிறங்கியது. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா நீக்கப்பட்டு பிரஷித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார்.
இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் துவக்கம் தந்தனர். ருதுராஜ் 8 ரன்னில் ஹேஷல்வுட் பந்தில் கேட்சானார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடினார். பதிலுக்கு சுப்மன் கில்லும் அதிரடி காட்டினார். இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 79 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டியில் பாதியில் நிறுத்தப்பட்டது.
பிறகு மழை நின்றதை தொடர்ந்து போட்டி துவங்கியது. அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் 86 பந்துகளில் சதம் அடித்தார். 90 பந்துகளில் 105 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் அவுட்டானார். சுப்மன் கில் 97 பந்துகளில் 104 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்
இஷான் கிஷான் 31 ரன்களுக்கு அவுட்டானார். கேப்டன் லோகேஷ் ராகுல் தன் பங்கிற்கு வேகம் காட்டினார். அவரும் அரைசதம் அடித்து அசத்தினார். 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். சிக்சர், போர் என பந்துகளை பறக்கவிட்ட சூர்யகுமாரும் அரைசதம் அடித்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 72 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அதிக ரன்கள்
இன்றைய போட்டியில் எடுத்த 399 ரன்களே , ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும்.
200 ரன்
2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் – சுப்மன் கில் ஜோடி 200 ரன்கள் எடுத்தது.
சாதனை
ஒரு நாள் போட்டிகளில் 35வது இன்னிங்சில் 1,900 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமை சுப்மன் கில்லுக்கு கிடைத்தது.
தொடர்ந்து ஆஸி., அணி விளையாடிய நிலையில் 9-வது ஒவர் முடிவின் போது மீண்டும் மழை குறுக்கிட்டது. பின்னர் டக்ஸ்வொர்த்லீவிஸ் முறைப்படி ஆட்டம் 33 ஓவரில் 317 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து விளையாடிய ஆஸி., அணி 28.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனையடுத்து இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்