புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், டெல்லியில் நடைபெறவுள்ள இந்தோ-பசிபிக் ராணுவ தளபதிகள் மாநாட்டில், பீரங்கிகள், டிரோன்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் காட்சிபடுத்தப்படவுள்ளன.
இந்தியா தற்போது 85-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த ஏற்றுமதியில் 100 உள்நாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஏவுகணைகள், பீரங்கிகள், ராக்கெட் குண்டுகள், கவச வாகனங்கள், ரோந்து படகுகள், குண்டு துளைக்காத ஜாக்கெட், ரேடார்கள், கண்காணிப்பு கருவிகள் மற்றும் வெடிபொருட்களை நம்நாடு ஏற்றுமதி செய்து வருகிறது.
ஆஸ்திரேலியா, ஜப்பான், இஸ்ரேல், பிரேசில் உட்பட 34 நாடுகளுக்கு குண்டு துளைக்காத உடைகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. சுமார் 10 நாடுகளுக்கு துப்பாக்கி குண்டுகளை ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு பாதுகாப்பு எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை ஏற்றுமதி செய்கிறது.
இந்நிலையில், இந்தோ-பசிபிக் ராணுவ தளபதிகள் மாநாடு டெல்லியில் செப்டம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதில்20 நாடுகளின் ராணுவ தளபதிகள் உட்பட 35 நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டின்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பீரங்கிகள், டிரோன்கள், எதிரிநாட்டு டிரோன்களை கண்டறியும் கருவிகள், டிரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள், ஜாமர்கள், துப்பாக்கிகள், பாதுகாப்பு கவச உடைகள் ஆகியவற்றை இந்திய ராணுவம் காட்சிபடுத்தவுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.686 கோடியாக இருந்த ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது 23 மடங்கு அதிகரித்து ரூ.16,000 கோடியை எட்டியுள்ளது.
அடுத்த நிதியாண்டுக்குள் ராணுவத் தளவாட ஏற்றுமதியை ரூ.35,000 கோடியாக உயர்த்தஇந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தோ-பசிபிக் ராணுவ தளபதிகள் மாநாட்டில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவத் தளவாடங்களை காட்சிபடுத்துவதன் மூலம், இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்காட்சியில் 30 இந்திய நிறுவனங்கள் பங்கேற்கின்றன.