நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த மந்திரிகளுக்கான கூட்டத்தொடரில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். தெற்கு எழுச்சி பெறுகிறது: நல்லுறவுகள், அமைப்புகள் மற்றும் சிந்தனைகள் என்ற தலைப்பிலான இந்த கூட்டத்தொடரை ஓ.ஆர்.எப். என்ற ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பு ஏற்று நடத்தியது.
அதனுடன், ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர அமைப்பு மற்றும் ஐ.நா. இந்தியா மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேசன் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், உலகளவில் வளர்ச்சிக்கான மனப்பாங்கு உள்ளது. உலகளாவிய தெற்கு பகுதி நாடுகள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன. ஆனால், அரசியல் ரீதியிலான எதிர்ப்பும் உள்ளது என்று கூறியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் செல்வாக்கு மிக்க பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் மாற்றத்திற்கான அழுத்தங்களை எதிர்க்கிறார்கள்.
பொருளாதார ரீதியாக இன்று ஆதிக்கம் செலுத்த கூடியவர்கள், தங்களுடைய உற்பத்தி சார்ந்த திறன்களை மற்றவர்களிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றனர். உண்மையில், அந்த திறன்களில் பல விசயங்களை ஆயுதங்களாக அவர்கள் மாற்றி வைத்திருக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் சரியான விசயங்களை பற்றி பேசுவார்கள். ஆனால், இன்று வரை உண்மை என்னவெனில், இது ஓர் இரட்டை நிலைப்பாடுகளை கொண்ட உலகாக உள்ளது என்று பேசினார்.
ஒரு பகுதி கொரோனா பரவல் மற்றும் ஒரு பகுதி உக்ரைன் விவகாரத்தில் கவனம் என சர்வதேச பேச்சுவார்த்தைகளில் இருந்து மற்ற விசயங்கள் வெளியேறி விட்டன.
கடன், நீடித்த வளர்ச்சிக்கான இலக்கிற்கான மூலவளங்கள், டிஜிட்டல் வசதியை பெறுதல், ஊட்டச்சத்து மற்றும் பாலின வேறுபாடு, பருவநிலை சார்ந்த செயல்பாட்டுக்கான வளங்கள் உள்ளிட்டவை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் இன்று பிரச்சனையில் ஆழ்த்தியிருக்கும் முக்கிய விசயங்களாக உள்ளன என்று அவர் பேசியுள்ளார்.