புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி உடன்பாட்டுக்கு ‘இண்டியா’ கூட்டணி தயாராகி வருகிறது.
வரும் மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக வென்று நரேந்திர மோடியை பிரதமராக தொடர வைக்க பாஜக விரும்புகிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இண்டியா’ எனும் பெயரில் புதிய கூட்டணி அமைத்துள்ளன. இதன் 28 உறுப்பு கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி, தனது சொந்த மாநிலத்தில் தொகுதி உடன்பாட்டுக்கு தயாராகி வருகிறது. இதில் உ.பி.யில் செல்வாக்குள்ள கட்சிகளுக்கு மட்டுமே சமாஜ்வாதி தொகுதிகளை ஒதுக்கும் என கூறப்படுகிறது.
நாட்டில் அதிக மக்களவை தொகுதிகளை (80) கொண்ட மாநிலமாக உபி. உள்ளது. இங்கு ஆளும் பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி உள்ளது. இக்கட்சியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் தலைமையில் இண்டியா கூட்டணியின் தொகுதி பங்கீட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி குறிப்பிட்ட 40 தொகுதிகளை எக்காரணம் கொண்டும் விட்டுத்தரத் தயாராக இல்லை. மீதம் உள்ள 40 தொகுதிகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் உடன்பாடு செய்துகொள்ளத் தயாராகி விட்டது.
தற்போது உ.பி.யில் பாஜக அதிக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. இக்கட்சி வசம் 66 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. சமாஜ்வாதிக்கு 2019 மக்களவை தேர்தலில் 5 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. இவற்றில் ராம்பூர் மற்றும் ஆசம்கரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இவ்விரண்டையும் பாஜகவிடம் பறிகொடுத்தது. சமாஜ்வாதியின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட இதர கட்சிகளால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. காங்கிரஸில் அதன் முக்கியத் தலைவரான சோனியா காந்தி மட்டும் ராய்பரேலியில் வெற்றிபெற்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் அடுத்து வரவிருக்கும் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் உ.பி.யில் தொகுதிப் பங்கீடு செய்ய விரும்புகிறது. ஏனெனில் இந்த 4 மாநிலங்களில் அக்கட்சிக்கு கிடைக்கும் வெற்றியை பொறுத்து உ.பி.யில் அதிக தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இக்கட்சிக்கு கடைசியாக உ.பி.யில் அதிக தொகுதிகளாக 2009-ல் 21 இடங்கள் கிடைத்தன. 2014-ல் 2 மற்றும் 2019-ல் ஒன்று மட்டும் கிடைத்தன. இதனால் 2009 மக்களவைத் தேர்தல் கணக்கீட்டுப்படி தொகுதிகளை கேட்க காங்கிரஸ் விரும்புகிறது.
ஆனால் இதை ஏற்க மனமில்லாத சமாஜ்வாதி, ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே காங்கிரஸுக்கு தொகுதிகள் ஒதுக்க விரும்புகிறது. இதற்காக, நான்கு மாநில தேர்தலுக்கு முன்பாக உ.பி.யில் தொகுதிப் பங்கீட்டை முடிக்க விரும்புகிறது. உ.பி.யில் தங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்கும்படி இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி கோருகிறது.