உத்தரப்பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் போலீஸ் அதிகாரியின் மனைவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்தில், அந்த போலீஸ் அதிகாரி தன் மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, ருதௌலி காவல் நிலையப் பகுதியிலுள்ள போலீஸ் அதிகாரியின் வீட்டில், செப்டம்பர் 20 மற்றும் 21-க்கு இடைப்பட்ட இரவில், போலீஸ் அதிகாரியின் மனைவி இருவரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாக அவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை போலீஸ் அதிகாரியும், அவரின் மனைவியும் வீடியோ ஒன்றை பதிவுசெய்துவிட்டு, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் விஷம் குடித்திருக்கின்றனர்.
இதில், போலீஸ் அதிகாரி அன்றே உயிரிழக்க, அவரின் மனைவியும் அதேநாளில் கோரக்பூரிலுள்ள மருத்துவமனையொன்றில் உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு எட்டு மற்றும் ஆறு வயதில் இரண்டு மகன்களும், ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றன. இந்த விவகாரத்தில், தம்பதி விஷம் குடிப்பதற்கு முன்னர் பதிவுசெய்த வீடியோவில், ஆதர்ஷ் (25), திரிலோகி (45) ஆகிய இருவரை குறிப்பிட்டிருப்பதை விசாரணையில் கண்டறிந்த போலீஸார், அவர்கள்மீது பிரிவு 376 டி (கூட்டுப் பாலியல் வன்கொடுமை), பிரிவு 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வெள்ளிக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர்.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் போலீஸார் கைதுசெய்துவிட்டதாகவும், அடுத்தகட்ட விசாரணை நடந்துவருவதாகவும் பஸ்தி மாவட்ட எஸ்.பி கோபால் கிருஷ்ணா நேற்று தெரிவித்தார்.