சேலம்: பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு, டூத் பேஸ்ட் உள்ளிட்டவைகளின் விலை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையை விட தற்போது 40 முதல் 50 சதவீதம் வரை விலை ஏற்றம் கண்டுள்ளது. இந்த விலை ஏற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை மற்றும் ஷாப் வர்த்தக நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை மற்றும் ஷாப் வர்த்தக நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பல ஆண்டாக அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்களின் விலை ஒரே சீராக இருந்தது. கடந்த இரண்டு மாதத்தில் பருப்புகளின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பல்ல.
குறிப்பாக துவரம் பருப்பு கர்நாடகவில் இருந்தும், உளுந்து ஆந்திராவில் இருந்தும், கடலை பருப்பு போன்றவை உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகின்றன. இவற்றின் விலையை அந்தந்த மாநில விவசாயிகள், வணிகர்கள் தீர்மானிக்கின்றனர். இதுவும் தற்காலிக விலை உயர்வு தான்.
பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு, டூத் பேஸ்ட் உள்ளிட்டவைகளின் விலை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையை விட தற்போது 40 முதல் 50 சதவீதம் வரை விலை ஏற்றம் கண்டுள்ளது. இவற்றின் விலையானது, வாரம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை விலை ஏற்றத்தை, அந்த நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. ஒன்று விலையை ஏற்றி விடுகிறார்கள் அல்லது எடையைக் குறைத்து விடுகின்றனர்.
சில்லறை வணிகர்கள் இதை விற்பனை செய்யும் போது பொதுமக்களிடம் மனக்கசப்பு ஏற்படுகிறது. எனவே, மத்திய அரசு தலையிட்டு விலை ஏற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், குமார், ரமேஷ்குமார், சீனிவாசன், ஜெயசீலன், உள்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.