இந்தியாவின் மிகப் பிரபல கோயிலான, ஆந்திராவில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்கள் வசதிக்காக கடந்த மார்ச் மாதம் 10 எலக்ட்ரிக் பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) கேரேஜில் இருந்து எலக்ட்ரிக் பேருந்து ஒன்றை மர்ம நபர் இன்று காலை களவாடிச் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
இதில், கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக போலீஸில் புகாரளிக்க, பேருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர். அதையடுத்து, பேருந்திலிருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம், திருப்பதி மாவட்டம், நாயுடுபேட்டை அருகே பேருந்து நின்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் சென்ற போலீஸ் அதிகாரிகள், பைபாஸ் சாலையில் பேருந்து நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தனர். பேருந்தின் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டதால், மர்ம நபர் பேருந்தை விட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போலீஸார் தற்போது இந்த விவகாரத்தில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரிக்குமாறு கூறியிருக்கின்றனர்.