தைபே,-தைவானில், ‘கோல்ப்’ பந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 பேர் பலியாகினர். இதில் நான்கு பேர், மீட்புக்குழுவைச் சேர்ந்தவர்கள்.
கிழக்காசிய நாடான தைவானின், பிங்டங் நகரில் உள்ள தொழிற்பூங்காவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கோல்ப் பந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது.
அந்த தொழிற்சாலை முழுதும் தீ மளமளவென பரவியதுடன், அக்கட்டடமும் தரைமட்டமானது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டனர்.
நீண்டநேர போராட்டத்திற்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் சிக்கி ஏழு பேர் உடல் கருகி பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும், சிலர் மாயமானதாக தெரியவந்தது.
இதையடுத்து தேடுதல் வேட்டையை மீட்புக்குழுவினர் தீவிரப்படுத்தினர். அப்போது இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்த மூன்று பேரின் உடல்களை மீட்டனர்.
இதன் காரணமாக விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை, 10 ஆக அதிகரித்துள்ளது. இதில், நான்கு பேர் மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே, தைவான் அதிபர் சை இங்வென், தீவிபத்து ஏற்பட்ட விபத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement