மதுரை: மனிதர்களே இறங்காமல் மாநகராட்சி பாதாள சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்வதற்கு சென்னை ஐஐடி (Indian Institute of Technology IIT) நிறுவனம் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட ரோபாட்டிக் வாகனம் மதுரை வந்துள்ளது. இந்த வாகனம், இன்று முதல் வார்டுகளில் பாதாள சாக்கடையை தூர்வாரும் பணியை தொடங்கியிருக்கிறது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய மாநகராட்சியாக மதுரை இருக்கிறது. 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். மீனாட்சியம்மன் கோயிலை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மதுரை மாநகரத்தில் கடந்த காலத்தில் மக்கள் நெருக்கம் குறைவு. அரைநூற்றாண்டுக்கு முன்பு வசித்த மக்கள் தொகை, கட்டிடங்கள் உள்கட்டமைப்பு அடிப்படையில், அக்காலத்தில் வசித்த மக்கள், கட்டிட உள்கட்டமைப்புக்கு தகுந்தார்போல் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது மக்கள் நெருக்கம், கட்டிடங்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது.
இதனால், தற்போது வெளியாகும் கழிவு நீருக்கு கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் தாங்க முடியாமல் உடைவதும், பொதுமக்கள் தூக்கிவீசும் கழிவுப்பொருட்களால் அடைப்பு ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. பாதாள சாக்கடை தொட்டிகளில் கழிவு நீர் பொங்கி வெளியேறி ஆறுபோல் சாலைகளில் அவ்வப்போது பெருக்கெடுத்து ஓடுகிறது.
பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் உடைப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் பழுதுபார்க்க முயலும்போது குடிநீர் குழுாய்கள் உடைந்து குடிநீருடன் கழிவு நீர் கலந்துவிடுகிறது. அதனால், மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் சாதாரணமாகிவிட்டது.
மதுரை மாநகராட்சியில் தற்போது பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம், புறநகர் 28 வார்டுகளில் இப்பணியுடன் புதிதாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியும் நடக்கிறது. இப்பணிகளால் அடிக்கடி பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு திரும்பிய பக்மெல்லாம் கழிவு நீர் தெருக்களில் பொங்கி வெளியேறுவதால் மக்கள், கவுன்சிலர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை சீரமைக்க தொட்டிகளில் இறங்கும் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த ஓர் ஆண்டுக்கு முன் மதுரை நேரு நகரில் பாதாள சாக்கடை கழிவு நீர் தொட்டியில் உள்ள மின்மோட்டாரை சரி செய்ய பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் இறங்கி பணிபுரிந்த 3 மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.
அதே ஆண்டு ஜூன் மாதம் விளாங்குடியில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து ஒரு தூய்மைப் பணியாளர் பலியானார். அதுபோல், கடந்த 2016-ல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய ஒருவர், 2018-ல் இரண்டு பேர் விஷவாயு தாக்கி பலியாகினர். இதற்கு முன்பும் மதுரை மாநகராட்சியில் இதுபோல் பாதாள சாக்கடை பணியின்போது பல்வேறு தூய்மைப் பணியார்கள் உயிரிழந்துள்ளனர்.அதிாரிகள், பொதுமக்கள் நெருக்கடியால் தூய்மைப் பணியாளர்கள் வேறு வழியில்லாமல் பாதாள சாக்கடை தொட்டியில் இறங்கி எந்த பாதுகாப்பும் இல்லாமல் அடைப்பை சரி செய்யும்போது இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் மனித உரிமை ஆணையமும், நீதிமன்றமும் பாதாள சாக்கடை தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி பணிபுரியக்கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதால் தூய்மைப்பணியாளர்கள் தற்போது உள்ளே இறங்கி வேலை பார்ப்பது இல்லை. அதனால், பாதாள சாக்கடை தொட்டி, அதன் குழாய்களில் என்ன அடைத்து இருக்கிறது, எங்கே உடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை நுட்பமாக அறிய முடியவில்லை.
இதனால், மதுரை மாநகராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை அடைப்புகளை சீரமைக்கவும், தூர்வாரமும் ரோபாட்டிக் இயந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்தது. அதன் அடிப்படையில் ‘சோலினாஸ்’ நிறுவனமும், சென்னை ஐஐடி நிறுவனமும் (Indian Institute of Technology (IIT) இணைந்து உருவாக்கிய ரோபாட்டிக் இயந்திரம் கொண்டு இன்று முதல் மதுரை மாநகராட்சியில் தூய்மைப்பணி தொடங்கியிருக்கிறது.
‘ரோபாட்டிக்’ இயந்திரத்தில் உள்ள கிரைண்டர் பிளேடு மாதிரியான அமைப்பு, பாதாள சாக்கடையின் உள்ளே சென்று சுற்றுகிறது. பாதாள சாக்கடை தொட்டி, குழாயில் உள்ள மண் அடைப்பு, வேறு ஏதாவது பொருட்கள் தட்டுப்பட்டால் அவற்றை அரைக்கிறது.
அந்த கழிவுப் பொருட்கள் ரோப்பாட்டிக் இயந்திரத்தின், மற்றொரு பைப் வழியாக வெளியேற்றப்படுகிறது. மேலும், ரோபாட்டிக் இயந்திரத்தில் உள்ள கேமிரா, பாதாள சாக்கடை தொட்டி, குழாய்களில் உள்ளே செலுத்தப்பட்டு எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது,
எந்தப் பொருள் அடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை கண்டறிகிறது அதன் அடிப்படையில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் எளிதாக பாதாள சாக்கடைகளை தூர்வார முடிகிறது. இனி இந்த ரோபாட்டிக் இயந்திரம் பாதாள சாக்கடை அடைப்பு, உடைப்பு ஏற்படும் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக சரி செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.