காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி, கடந்த ஏப்ரல் மாதம் திடீரென பா.ஜ.க-வில் இணைந்தார். அதுவும், மோடி குறித்து பிபிசி ஆவணப்படம் வெளியான சமயத்தில் காங்கிரஸிலிருந்து விலகிய மூன்றே மாதங்களில் பா.ஜ.க-வில் இணைந்தார் அனில் ஆண்டனி.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Screenshot_2023_04_06_17_02_50.png)
மேலும், “ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு உழைப்பதுதான் தங்களுடைய கடமை என காங்கிரஸ் தலைவர்கள் பலரும் நம்புகின்றனர். எனவே நாட்டுக்காக உழைக்க பா.ஜ.க-வில் இணைகிறேன்” என விளக்கமளித்திருந்தார் அணில் ஆண்டனி. இந்த நிலையில், ஏ.கே.ஆண்டனியின் மனைவி எலிசபெத், தன் மகன் அணில் ஆண்டனிக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்த பிறகு அவர் பா.ஜ.க-வில் இணைந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
Christian meditation centre என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில் ஏ.கே.ஆண்டனியின் மனைவி எலிசபெத், “என் மகனுக்கு 39 வயதாகிறது. அவர் ஒருநாள் எனக்கு போன் செய்து, பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்ததாகவும், அவர்கள் தன்னை பா.ஜ.க-வில் சேருமாறு கூறியதாகவும் என்னிடம் கூறினார். எனது குடும்பமும் காங்கிரஸ் கட்சியை நம்பி வாழ்ந்து வருகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/GridArt_20230924_115828638.jpg)
ஆனால், பா.ஜ.க-வில் சேர்ந்தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று என் மகன் என்னிடம் கூறினார். மேலும், என் மகன் பா.ஜ.க-வில் சேரும் முடிவை குடும்பத்தில் உள்ள யாரிடமும் நான் தெரிவிக்கவில்லை. பின்னர், நான்கு நாள்களுக்குப் பிறகு டிவி சேனல்கள் மூலம் இது தெரியவந்ததும், அது என் கணவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Screenshot_2023_09_24_11_50_26.png)
அதைத் தொடர்ந்து தனது முடிவை ஒப்புக்கொண்ட என் மகனிடம், வீட்டில் அரசியல் பேசக் கூடாது என்ற நிபந்தனையுடன் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம் என்று கூறப்பட்டது. பா.ஜ.க மீது எனக்கு அவமதிப்பு இருந்தது. பின்னர் பிரார்த்தனை மூலம் அந்த எண்ணம் மாறியது” என்றார்.
தன் மகன் பா.ஜ.க-வில் இணைந்த சமயத்தில், “என் மகனின் செயல் மிகவும் தவறானது. மிகவும் வேதனையளிக்கக் கூடியது” என்று ஏ.கே.ஆண்டனி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.