ராஜமுந்திரி: திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு வழக்கில், தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம், சிறையில் 12 பேர் கொண்ட சிஐடி குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர்.
திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் கடந்த 9-ம் தேதி கைது செய்தனர். இவர் தற்போது ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 22-ம் தேதி வரை அவருக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு சார்பில் தொடரப்பட்ட ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனால், நேற்று உச்ச நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பில் ஜாமீன் மனு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 நாட்கள் வரை சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரணை நடத்த விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் சிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம்,2 நாட்கள் வரை சந்திரபாபு நாயுடுவை அவர் வைக்கப்பட்டுள்ள சிறையிலேயே மிகவும் கண்ணியமான முறையில் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று காலை சந்திரபாபு நாயுடுவின் வழக்கறிஞர் தும்மலபாடி ஸ்ரீநிவாஸ் முன்னிலையில், சிஐடி டிஎஸ்பி தனஞ்செயுடு தலைமையில், 12 பேர் கொண்ட சிஐடி குழுவினர் அவரிடம் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடத்தினர். முன்னதாக சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இடையே ஒரு மணி நேரம் உணவு இடைவேளையும் தரப்பட்டது.
மேலும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிடங்கள் வழக்கறிஞரிடம் சந்திரபாபு நாயுடு, ஆலோசனை பெற அவகாசமும் வழங்கப்பட்டது. 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இரண்டாவது நாளாக இன்றும் அவரிடம் விசாரிக்க உள்ளனர்.