வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதை எதிர்ப்பதா? – இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸ் கண்டனம்

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விரும்புவதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வரும் 2024 மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்த கூட்டணிக்கு ‘இண்டியா’ என பெயரிடப்பட்டுள்ளது. அதேநேரம், கேரளா, மேற்கு வங்கத்தில் இண்டியா கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என இடதுசாரிகள் தெரிவித்துள்ளன. இதனால், கேரளாவில் காங்கிரஸும், இடதுசாரிகளும் தனித்தனியாக போட்டியிடும் என கூறப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் செயற்குழு: இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் கடந்த 19, 20-ம் தேதிகளில் நடந்தது. இதில், கேரளாவின் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை எதிர்த்து ராகுல் போட்டியிட கூடாது என வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அக்கட்சி
அதிகாரப்பூர்வமாக இதுபோன்ற கோரிக்கையை வைக்கவில்லை.

காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு: இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கூறும்போது, ‘‘வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். இதற்கிடையே, அந்த தொகுதியில் ராகுல் போட்டியிட கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு கூற கம்யூனிஸ்ட் கட்சிக்கு உரிமை இல்லை’’ என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்)ஒருங்கிணைப்பாளருமான எம்.எம்.ஹசன் கூறும்போது, ‘‘காங்கிரஸ் வேட்பாளர்களை முடிவு செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிகாரம் இல்லை. காங்கிரஸ்தான் அதை முடிவு செய்யும்’’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.சந்தோஷ் குமார் கூறும்போது, ‘‘இண்டியா கூட்டணியில் ராகுல் முக்கிய தலைவராக உள்ளார். இந்நிலையில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சிக்கு எதிராக அவர் போட்டியிட்டால், அது தவறான தகவலை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும். அத்துடன், பாஜக இதை வைத்தே அரசியல் செய்யும். எனவேதான் இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டது. அதேநேரம் ராகுலுக்கு பதில் அக்கட்சியை சேர்ந்த வேறொருவர் போட்டியிட்டால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது’’ என்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஏ.கே.பாலன் கூறும்போது, ‘‘எந்த தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட கட்சிகள்தான் முடிவு செய்யும். இதில் கருத்து கூற ஒன்றும் இல்லை’’ என்றார்.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு, 4.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 2-ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.