இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதில் அரசு தரப்பிலிருந்தும், அவர் சார்ந்த ஆளும் பா.ஜ.க தரப்பிலிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தவே, உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் டெல்லி போலீஸார் பிரிஜ் பூஷண் மீது வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்களைச் சேகரிக்க ஆரம்பித்தனர்.
அதைத் தொடர்ந்து, டெல்லி போலீஸார் கடந்த ஜூன் 15-ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், பிரிஜ் பூஷண் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த வழக்கு டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், பிரிஜ் பூஷண் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், நீதிமன்ற விசாரணைக்கு இன்று அவர் வரவில்லை. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தஜிகிஸ்தானில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது நடைபெற்ற சம்பவத்தைக் குறிப்பிட்டு பதிலளித்த டெல்லி போலீஸார், “கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் மல்யுத்த வீராங்கனைகளை பிரிஜ் பூஷண் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில், பிரிஜ் பூஷண் ஒரு மல்யுத்த வீராங்கனையை அறைக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்திருக்கிறார். மல்யுத்த வீராங்கனை அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, தந்தையைப் போல நடந்துகொண்டதாக அவரிடம் பிரிஜ் பூஷண் கூறியிருக்கிறார். இதன் மூலம், தான் என்ன செய்கிறோம் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. இதில், மல்யுத்த வீராங்கனை எதிர்வினையாற்றினாரா, இல்லையா என்பது கேள்வியல்ல. ஆனால், அவருக்கு அங்கு தவறானது நடந்திருக்கிறது.
மேலும், அங்கு நடைபெற்ற இன்னொரு நிகழ்ச்சியின்போது, பிரிஜ் பூஷண் வேறொரு மல்யுத்த வீராங்கனையின் அனுமதியின்றி அவர் அணிந்திருந்த மேலாடையை விலக்கி, தகாத முறையில் அவரிடம் நடந்திருக்கிறார்” என்று தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, அக்டோபர் 7-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம். முன்னதாக இந்த விவகாரத்தில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் தலைமையில் மேற்பார்வைக் குழு ஒன்றை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு, விசாரணை அறிக்கையை வெளியிடவில்லை என்றாலும், அதன் நகல் பிரிஜ் பூஷண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் டெல்லி போலீஸுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.