கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து அந்தக் கட்சி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்மையில் இணைந்தது. இணைந்த கையுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுகளும் எழுந்தன.
இது தொடர்பாக தேவகவுடாவின் மகன் குமாரசாமி, மத்திய உள்துறை அமித் ஷாவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, கோவா முதல்வர் பிரமோத் சவ்வாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
அமித் ஷாவுடனான சந்திப்பிற்குப் பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி, “பா.ஜ.க-வுடனான எங்களுடைய கூட்டணி பற்றி விவாதித்தோம். முக்கிய பிரச்னைகள் பற்றி முறையாக விவாதித்தோம். எங்கள் தரப்பிலிருந்து இந்தக் கோரிக்கையும் இல்லை” என்று தெரிவித்தார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் இதற்கு முன்பும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணியிலிருந்திருக்கிறது. ஜனவரி 2006 மற்றும் மே 2018 ஆகிய ஆண்டுகளில் கூட்டணி வைத்து, முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார் குமாரசாமி.
இந்த நிலையில், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார், “அவர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
மேலும் காவிரி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தவர், “காவேரி விவகாரம் குறித்து அட்வொகேட் ஜெனெரலை வரவழைத்தோம். தற்போது 3.5 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது, இது இந்த மாதம் 26-ம் தேதி வரை தொடரும். அதன் பிறகு இதை எப்படி அணுகலாம் என்று திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.