இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இடதுகை பேட்டரான டேவிட் வார்னர் திடீரென வலதுகை பேட்டராக மாறி ஆடிய சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. வார்னர் எதற்காக அப்படி வழக்கத்தை மாற்றி ஆடினார்?
இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 399 ரன்களை எடுத்திருந்தது. ஆஸ்திரேலியாவிற்கு 400 ரன்கள் டார்கெட். ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்களில் 56-2 என்றிருந்த நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. சில நிமிட இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியது. டக்வொர்த் லீவிஸ் படி ஆஸ்திரேலியாவிற்கு 33 ஓவர்களில் 317 ரன்கள் டார்கெட். இந்த சூழலில்தான் களத்தில் வார்னர் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தார்.
13 வது ஓவரை ஆப் ஸ்பின்னரான அஷ்வின் வீச வருகையில், இடது கை பேட்டராக அறியப்பட்ட வார்னர் முழுமையாக அப்படியே மாறி வலதுகை பேட்டராக அஷ்வினை எதிர்கொண்டார். பார்ப்பதற்கு அப்படியே கண்ணாடி பிம்பம் போன்றே இருந்தது.
அஷ்வினுக்கு எதிராக மொத்தம் 4 பந்துகளை வலதுகை பேட்டராக எதிர்கொண்டார் வார்னர். இதில், இரண்டு சிங்கிள்களும் ஒரு பவுண்டரியும் அடித்துவிட்டு நான்காவது பந்தில் அவுட்டும் ஆனார்.
எதற்காக இப்படி?
கிரிக்கெட்டில் ‘Match Up’ என்கிற வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்படுவதை கவனித்திருப்பீர்கள். அதாவது, இன்னாருக்கு இன்ன முறையில் பந்துவீசினால் இப்படியான ரிசல்ட் கிடைக்கும் என்பதுதான் மேட்ச் அப்கள். ஒரு வலதுகை பேட்டருக்கு ஆப் ஸ்பின்னரை விட லெக் ஸ்பின்னரை வைத்து அட்டாக் செய்வது விக்கெட்டுக்கான வாய்ப்பை இன்னும் கூட்டிவிடும். அதேமாதிரிதான் இடதுகை பேட்டருக்கு லெக் ஸ்பின்னரை விட ஆப் ஸ்பின்னரை பயன்படுத்துவது அதிக விக்கெட் வாய்ப்பைக் கொடுக்கும். இது ஒரு அடிப்படையான விஷயம்.
இதனால்தான் வார்னருமே ஒரு இடது கை பேட்டராக ஆப் ஸ்பின்னரான அஷ்வினை எதிர்கொள்ளாமல் வலது கை பேட்டராக மாறி எதிர்கொண்டார். முதலில் அஷ்வினுக்கு எதிராக சில பந்துகளை இடதுகை பேட்டராகத்தான் ஆடினார். ஆனால், பந்துகளை சரியாக கனெக்ட் செய்ய முடியாமல் எட்ஜ் வாங்கியதால்தான் வலதுகைக்கு மாறும் முடிவை எடுத்தார். பயிற்சி முகாம்களிலேயே அஷ்வின் போன்ற ஸ்பின்னர்களை சமாளிக்க வலதுகையில் பேட்டிங் ஆடி பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக் கொண்டுதான் வார்னர் வந்திருக்கிறார்.
கிரிக்கெட் பொறுத்தவரைக்கும் பௌலிங், பேட்டிங் இரண்டிலுமே இதேமாதிரி வலது-இடது என போட்டிக்கிடையே மாறிக்கொள்ளலாம். ஆனால், அதை முறையாக நடுவருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே விதி.